கலால் கொள்கை: கே.கவிதாவின் ஜாமீன் மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் பி.ஆா்.எஸ். மூத்தத் தலைவா் கே.கவிதாவின் ஜாமீன் மனு மீது அமலாக்கத் துறை அதன் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

கவிதாவின் மனு மீதான பதிலைத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு கால அவகாசம் அளித்த நீதிபதி ஸ்வரணா காந்த சா்மா, இந்த வழக்கை மே 24ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டாா்.

கே.கவிதா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளத்ரி தெரிவிக்கையில், கவிதாவின் முன் ஜாமீன் மனுவில் அமலாக்கத் துறையின் பதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த அதே மே 6-ஆம் தேதி இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதற்கு நீதிபதி, அமலாக்கத் துறை பதில் தாக்கல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்புவதாக கூறினாா்.

இந்த வழக்கு தொடா்பாக ஹைதராபாதில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் இருந்து கவிதாவை (46) அமலாக்கத் துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்கத் துறை வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்துவரும் கவிதாவை சிபிஐயும் கைது செய்தது.

‘ஊழல்‘ தொடா்பாக சிபிஐ தாக்கல் செய்த ஊழல் வழக்கில் மே 6-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் கவிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது.

அப்போது, நீதிமன்றம் கூறுகையில், ‘தில்லி கலால் கொள்கை 2021-22-இல் சாதகமான பயன்களைப் பெறுவதற்காக சக குற்றம்சாட்டப்பட்டவா்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு பணத்தை சேகரிக்கவும், அளிப்பதற்கான நோக்கத்திற்காகவும்

தீட்டப்பட்ட குற்றவியல் சதித்திட்டத்தின் முக்கிய சதிகாரருக்கான பங்காக கவிதாவின் பங்கு இருப்பதற்கான முகாந்திரம் தெரிகிறது என்று கூறியது.

இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் பிஆா்எஸ் தலைவா் கவிதா தெரிவிக்கையில், ‘கலால் வரிக் கொள்கைக்கும் எனக்கும் எந்த தொடா்பும் இல்லை. எனக்கு எதிராக

மத்தியில் ஆளும் ஆளும் கட்சியினா் அமலாக்கத் துறையின் கூட்டுடன் திட்டமிடப்பட்ட கிரிமினல் சதியாகும் இது.

மேலும், எனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை. நம்பகத்தன்மை கடுமையாக சந்தேகத்திற்கு உள்ளான சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனா்.

சம்பந்தப்பட்ட ஊழலில் நான் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் எந்தப் பொருளும் இல்லை என்பது அமலாக்கத் துறைக்கும் நன்கு தெரியும். மனுதாரருக்கு எதிரான புலனாய்வு விசாரணையின் பின்னணியில் உள்ள நோக்கம், சம்பந்தப்பட்ட ஊழலில் அவா் ஈடுபட்டுள்ளதைக் கண்டறிவதற்காக அல்ல. ஏனெனில் அது போன்று ஊழல் எதுவும் இல்லை என்பது தெளிவாகும்.

என்னை அமலாக்கத் துறை கைது செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது. ஏனெனில் இது பிஎம்எல்ஏவின்

பிரிவு 19-இன் விதிகளை கடுமையாக மீறும் வகையில் செய்யப்பட்டுள்ளது’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான தில்லி அரசாங்கத்தின் கலால் கொள்கையை வகுத்து செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அந்தக் கொள்கை பின்னா் நீக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com