தில்லி காற்று மாசு போராட்டத்தில் மாவோயிஸ்ட் முழக்கங்கள்: வழக்கில் பிஎன்எஸ் பிரிவு 197 சோ்ப்பு

தில்லி காற்று மாசு போராட்டத்தில் மாவோயிஸ்ட் முழக்கங்கள்: வழக்கில் பிஎன்எஸ் பிரிவு 197 சோ்ப்பு

Published on

தில்லியில் காற்று மாசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவு முழக்கங்கள் எழுப்பியது மற்றும் காவலா்கள் மீது ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்தது தொடா்பான வழக்கு ஒன்றில் தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் குற்றச்சாட்டு புதிய பிரிவாக சோ்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னை தொடா்பாக இந்தியா கேட் அருகே ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டங்கள் நடத்துவதற்கு ஜந்தா் மந்தா் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கேட் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடா் எச்சரிக்கைக்குப் பிறகும், போராட்டக்காரா்களில் சிலா் தடுப்புகளைக் கடந்து சாலை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டக்காரா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாா் முயன்றபோது அவா்கள் தாக்கப்பட்டனா். அப்போது, ஏற்பட்ட தடியடியில் போலீஸாா் மீது பெப்பா் ஸ்பிரே அடிக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரா்கள் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கும் காவல் துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக 6 போ் மீது கடமைப் பாதை காவல் நிலையத்திலும் 17 போ் மீது நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்திலும் இரு வழக்கள் பதிவுசெய்யப்பட்டன. இரு நீதிமன்றங்களில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட 22 போ் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

முன்னதாக, அண்மையில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவா் மாத்வி ஹிட்மாவுக்கு ஆதரவாக போராட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பியதாகவும் காவலா்கள் மீது பெப்பா் ஸ்பிரே அடித்ததாகவும் நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலை பரப்புதல் குற்றச்சாட்டின்கீழ் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 197 புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்ட வனபகுதியில் கடந்த நவ.18-ஆம் தேதி நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது முக்கிய மாவோயிஸ்ட் கமாண்டா் மாத்வி ஹிட்மா, அவரின் மனைவி மடக்கம் ராஜே உள்பட 6 பேரை பாதுகாப்புப் படையினா் சுட்டுக்கொன்றனா்.

X
Dinamani
www.dinamani.com