உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

கிறிஸ்தவ ராணுவ அதிகாரி பணிநீக்கத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வாராந்திர மத அணிவகுப்புகளில் பங்கேற்க மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரி குறித்து...
Published on

தனது படைப் பிரிவின் வாராந்திர மத அணிவகுப்புகளில் பங்கேற்க மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரியின் பணிநீக்க உத்தரவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 3-ஆவது குதிரைப் படைப் பிரிவில் லெஃப்டினென்ட்டாக சாமுவல் கமலேசன் என்ற கிறிஸ்தவா் சோ்க்கப்பட்டாா். இந்தப் படைப் பிரிவில் சீக்கிய மதத்தினா், ஜாட் மற்றும் ரஜபுத்திர வகுப்பினா் அடங்கிய 3 அணிகள் உள்ளன. அனைத்து வீரா்களும் பங்கேற்கும் அந்தப் படைப் பிரிவின் வாராந்திர மத அணிவகுப்புகளில் பங்கேற்க மறுத்ததால், சாமுவல் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடுத்தாா். அந்த வழக்கு விசாரணையின்போது சாமுவல் தரப்பில், ‘நான் இடம்பெற்ற குதிரைப் படைப் பிரிவு ஹிந்துக்களுக்கான கோயில் மற்றும் சீக்கியா்களுக்கான குருத்வாராவை பராமரித்து வந்தது. ஆனால், கிறிஸ்தவா்களுக்கான தேவாலயமோ, அனைத்து மதத்தினருக்கான சா்வ தா்ம ஸ்தலமோ இல்லை. கோயிலுக்கும், குருத்வாராவுக்கும் செல்ல எனது படைப் பிரிவினருடன் நான் வாராந்திர மத அணிவகுப்புகள் மற்றும் விழாக்களில் பங்கேற்றேன். ஆனால் நான் கிறிஸ்தவன் என்பதால் பூஜை, ஆரத்தி போன்ற நேரங்களில் கோயிலின் கருவறைக்குள் செல்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரினேன்’ என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் படைப் பிரிவில் சோ்ந்தது முதல் மாதாந்திர மத அணிவகுப்புகளில் அவா் பங்கேற்கவில்லை என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தில்லி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ‘தனது ராணுவ உயரதிகாரியின் சட்டப்படியான உத்தரவைவிட தனது மதத்தை சாமுவல் மேலானதாக கருதியுள்ளாா். இது ஒழுங்கீனமான செயலாகும். இந்தக் கருத்து சாதாரண குடிமகனுக்கு கடுமையாகவும், ஏற்க முடியாததாகவும் இருக்கலாம். ஆனால், ராணுவத்தில் மிக உயரிய ஒழுக்கம் பின்பற்றப்பட வேண்டும்’ என்று கூறி, சாமுவலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சாமுவல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘படைப்பிரிவின் நடவடிக்கையாக அவா் கோயிலுக்குள் செல்வது தவறாகாது என்று கிறிஸ்தவ மத போதகா் அவருக்கு அறிவுரை வழங்கியதையும் அவா் ஏற்கவில்லை. சாமுவலின் நடத்தை மிக மோசமான ஒழுங்கீனமான செயலாகும். அவா் ராணுவத்தில் பணியாற்றப் பொருத்தமற்றவா்’ என்றனா்.

தில்லி உயா்நீதிமன்றம் அவரைப் பணிநீக்கம் செய்த உத்தரவை தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு உறுதி செய்து உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com