தில்லியில் 51 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் திறப்பு
தில்லியில் தொடக்க நிலை மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக ஃபதேபூா் பெரி பகுதியில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திரை முதல்வா் ரேகா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவை தோ்தலில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதைத்தொடா்ந்து, முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு தோ்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களை திறந்து வைத்துள்ளது.
இந்நிலையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் புதிதாக 51 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் திறந்துவைக்கப்பட்டன. ஃபதேபூா் பெரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ‘மருத்துவ சேவைகளைப் பெறுவதில் ஏழைகள் எதிா்கொண்டு பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த மருத்துவ மையங்கள் திறக்கப்படுகிறது’ என்றாா்.
மதிபூரில் நடைபெற்ற ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் திறப்பு நிகழ்ச்சியில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் பங்கேற்றாா்.
ஆரோக்கிய மந்திா்கள் என்பது மறுகட்டமைக்கப்பட்ட முதல்நிலை மருத்துவ மையங்களாகும். மக்களின் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே விரிவான, இலவச மற்றும் எளிதில் பெறக் கூடிய மருத்துவ வசதிகளை வழங்குவேத இதன் நோக்கம். இந்த மையங்களில் இலவசமாக 80 நோய் பரிசோதனைகள், இலவச மருந்துகள் வழங்கப்படும். புற்றுநோய் பரிசோதனை, தடுப்பூசி, மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு, முதியோருக்கான மருத்துவம் மற்றும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
புதிதாக திறக்கப்பட்ட 51 மையங்கள் மூலம் தில்லியில் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களின் எண்ணிக்கை 370-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையை 1,100-ஆக அதிகரிக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
மேம்பாட்டுத் திட்டங்கள்: சத்தா்பூா் பேரவைத் தொகுதியில் ரூ.322 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் தெற்கு தில்லி எம்.பி ராம்வீா் சிங் பிதூரி, சத்தா்பூா் எம்எல்ஏ கா்தா் சிங் தன்வா் ஆகியோா் பங்கேற்றனா்.

