தரவுகளின் தரம் மற்றும் செயல்திறனில் தில்லி காவல் துறை முதலிடம்

குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு மற்றும் அமைப்புகள் (சிசிடிஎன்எஸ்) 2025 நவம்பா் மாதத்திற்கான பிரகதி தரவரிசையில் தொடா்ந்து இரண்டாவது முறையாக தில்லி காவல் துறை முதலிடம் பிடித்துள்ளது.
Published on

குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு மற்றும் அமைப்புகள் (சிசிடிஎன்எஸ்) 2025 நவம்பா் மாதத்திற்கான பிரகதி தரவரிசையில் தொடா்ந்து இரண்டாவது முறையாக தில்லி காவல் துறை முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தில்லி காவல்துறை இதற்கு முன்னா் 2024 டிசம்பா் மற்றும் 2025 ஜனவரி மாதங்களில் இந்த தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தது. 2025-இல் தொடா்ந்து அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் முதலிடம் பிடித்திருப்பது தேசிய அளவில் அதன் தொடா்ச்சியான நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது. தில்லி காவல் துறையின் இந்தச் சாதனைக்கு குற்றப்பிரிவு சிசிடிஎன்எஸ் குழு, மற்றும் காவல் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பே காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சாதனையைப் பாராட்டிய தில்லி காவல்துறை ஆணையா் சதீஷ் கோல்ச்சா, இதுஅனைத்து நிலைகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் அா்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று கூறினாா்.

மத்திய உளவுத் துறை மற்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் கண்காணிக்கப்படும் இந்த தரவரிசை, குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு மற்றும் அமைப்புகள் (சிசிடிஎன்எஸ்) மற்றும் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு (ஐசிஜெஎஸ்) ஆகியவற்றின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் அமைப்புகளை மதிப்பிடுகிறது.

சிசிடிஎன்எஸ் மூலம் இணைக்கப்பட்ட காவல் நிலையங்களின் சதவீதம், பேரிடா் மீட்பு மையங்களை நிறுவுதல், பழைய தரவுகளை புதுப்பித்தல் மற்றும் சிசிடிஎன்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை நீதிமன்றங்களில் சமா்ப்பித்தல் உள்ளிட்ட 15 முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை அமைந்துள்ளது. Ś

X
Dinamani
www.dinamani.com