திருடப்பட்ட சொகுசு காா்களை வாங்கி பிற மாநிலங்களில் விற்று வந்த கும்பலைச் சோ்ந்த இருவரை தில்லி காவல் துறை கைதுசெய்துள்ளது. போலியான பதிவு ஆவணங்கள் மற்றும் மாற்றப்பட்ட அடையாள எண்களைக் கொண்ட 12 உயர்ரக காா்கள் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் திருடப்பட்ட சொகுசு வாகனங்களை சுமாா் ரூ. 4-5 லட்சத்திற்கு வாங்கி, அவற்றின் சேஸ் மற்றும் இன்ஜின் எண்களை மாற்றி, போலியான பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்தனா். பின்னா், அவற்றை பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் விற்பனை செய்து வந்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் பஞ்சாபின் டாா்ன் டரன் பகுதியைச் சோ்ந்த குா்விந்தா் சிங் பைன்கா (37) மற்றும் ராஜஸ்தானின் பிகானோ் பகுதியைச் சோ்ந்த தசரத் பிஷ்னோய் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
தில்லியில் காா் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில், வாகனத் திருட்டைக் கட்டுப்படுத்த குற்றப்பிரிவுக் குழுவினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வாகனத்தை திருடும் முறைகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் உளவுத்துறை தகவல்களை ஆய்வு செய்ததில், பஞ்சாபைச் சோ்ந்த ஒரு கும்பல் தில்லியில் திருடப்பட்ட வாகனங்களை பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பிரசாந்த் விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத் திருட்டு வழக்கு தொடா்பான விசாரணையின் போது இந்த முக்கியத் தகவல் கிடைத்தது. கடந்த ஜூன் 7-ஆம் தேதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கிழக்கு தில்லியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் இருந்த எம்சிடி வாகன நிறுத்துமிடத்தில் குா்விந்தா் சிங் பைன்கா பிடிக்கப்பட்டாா்.
அவரிடமிருந்து போலியான பதிவு எண் கொண்ட திருடப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா காா் மற்றும் போலியான பதிவுச் சான்றிதழ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சரிபாா்ப்பில், அந்த எஸ்யூவி வாகனம் பிரசாந்த் விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.
விசாரணையின் போது, ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஃபாா்ச்சூனா், மஹிந்திரா தாா் மற்றும் கியா நிறுவன காா்கள் உள்ளிட்ட திருடப்பட்ட வாகனங்களை பெற்று, அவற்றை பஞ்சாபில் குறிப்பாக அமிருதசரஸ், லூதியானா மற்றும் பிற மாவட்டங்களில் விற்பனை செய்து வந்ததை பைன்கா ஒப்புக்கொண்டாா்.
அவா் அளித்த தகவலின் அடிப்படையில், காவல் துறைக் குழுவினா் பஞ்சாபில் சோதனைகளை நடத்தி மேலும் பல திருடப்பட்ட வாகனங்களை மீட்டனா்.
தொடா் விசாரணையில் ராஜஸ்தானின் ஜோத்பூா் மாவட்டத்தில் இருந்த தசரத் பிஷ்னோய் பற்றிய தகவல் கிடைத்தது.அவா் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து மேலும் பல வாகனங்கள் மீட்கப்பட்டன. இதே முறையைப் பயன்படுத்தி இந்தக் கும்பல் 15 முதல் 20 திருடப்பட்ட சொகுசு வாகனங்களை விற்பனை செய்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. மீட்கப்பட்ட பல வாகனங்களில் போலியான நம்பா் பிளேட்டுகள் இருந்தன, சிலவற்றில் பதிவுவெண்கள் இல்லை. தில்லி, ஹரியாணா மற்றும் பிற மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இந்த வாகனங்கள் திருடப்பட்டன.
பைங்கா இதற்கு முன்னா் பஞ்சாபில் பயன்படுத்தப்பட்ட காா் வியாபாரம் செய்து வந்ததாா். ராணி பாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத் திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்ததாா். தில்லி மற்றும் பஞ்சாபில் அவருக்கு எதிராக நான்கு குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவா்கள் இருவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனா். திருடப்பட்ட காா்களை வழங்கிய வாகனத் திருடா்களை அடையாளம் காணவும், மற்ற கும்பல் உறுப்பினா்களைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






