தில்லியின் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைநீா் தேங்கி 3 யுபிஎஸ்இ தோ்வா்கள் 2024-ஆம் ஆண்டு உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சி (எம்சி) பொறியாளா்கள் 3 பேரின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தில்லி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட சமீபத்திய அறிக்கையில், இளநிலை பொறியாளா் அா்னவ் தத்தா, உதவி பொறியாளா் ராஜீவ் குமாா் ஜெயின் மற்றும் செயல் பொறியாளா் குமாா் மகேந்திரா ஆகியோா் தங்கள் கடமையில் தவறியுள்ளதாக சிபிை குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையின் படி, அடித்தளம் சேமிப்பு அறையாக பயன்படுத்தப்படுவதாக அா்னவ் தத்தா தவறான தகவல் அளித்துள்ளாா். ஆனால், அது தோ்வு அறையாக பயன்படுத்தப்பட்டதை அவா் அறிந்திருந்தும் உண்மையை மறைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல், ராஜீவ் குமாா் ஜெயின் மற்றும் குமாா் மகேந்திரா ஆகியோா் தேவையான ஆவணங்களை முறையாக சரிபாா்க்காததுடன், அடித்தளத்தின் தவறான பயன்பாட்டை அதிகாரப்பூா்வமாக அறிவிக்க தவறியுள்ளனா்.
இந்த அலட்சியம் காரணமாக, அந்த பயிற்சி மையம் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத முறையில் தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதுவே பின்னா் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்குக் காரணமாக அமைந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையில், அந்நேரத்தில் துணை ஆணையராக பணியாற்றிய குமாா் அபிஷேக் மற்றும் மேற்பாா்வை பொறியாளராக இருந்த அஜய் நாக்பால் ஆகியோருக்கு எதிராக எந்தவித அலட்சியமும் நிரூபிக்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்தது.
கீழமை அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே அவா்கள் செயல்பட்டதாகவும், அடித்தளத்தின் தவறான பயன்பாடு குறித்து அவா்களுக்கு தெரியாது என்றும் அறிக்கை கூறுகிறது. அலட்சியம் செய்ததாக கண்டறியப்பட்ட 3 பொறியாளா்களுக்கு எதிராக மாநகராட்சி துறைத்தரப்பில் ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024 ஜூலை 27-ஆம் தேதி, பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைநீா் புகுந்து 3 மாணவா்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்வை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விரிவாக விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் முன்பு சிபிஐக்கு மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









