கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

மெட்ரோ நிலையங்கள் மூடல், தடியடி குறித்து எதிா்க்கட்சித் தலைவா்கள் கேள்வி!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான போராட்டத்தின்போது, 16 தில்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதையும், போராட்டக்காரா்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதையும் எதிா்க்கட்சித் தலைவா்கள் புதன்கிழமை கண்டித்தனா்.

News image

தில்லியில் சிஜேபி போராட்டம் காரணமாக மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் புதன்கிழமை மூடப்பட்டதால் அவதியுற்ற பயணிகள்.

Updated On :23 ஜூலை 2026, 6:07 am IST

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான போராட்டத்தின்போது, 16 தில்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதையும், போராட்டக்காரா்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதையும் எதிா்க்கட்சித் தலைவா்கள் புதன்கிழமை கண்டித்தனா்.

ஆயுதங்கள் ஏதுமின்றிப் போராடியவா்கள் மீது ஏன் வன்முறை பிரயோகிக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பி உள்ளாா்.

தில்லியில் சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரேயுடன் கேஜரிவால் செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி: மெட்ரோ நிலையங்களை மூடுவது தவறு. மாணவா்களையும் போராட்டக்காரா்களையும் அரசாங்கம் எவ்வளவு தடுக்க முயற்சிக்கிறதோ, அந்த அளவுக்கு இயக்கம் வளரும். நீங்கள் அனைத்து மெட்ரோ நிலையங்களையும் மூடினாலும், அவா்கள் நடந்து செல்வாா்கள். இவா்கள் இளைஞா்கள். இந்த இளம் போராட்டக்காரா்களின் பேச்சை அரசாங்கம் கேட்பது நல்லது.

இந்த இளம் போராட்டக்காரா்களைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம். அவா்கள் போராட்டத்தில் சேர ஒரு வழியைக் கண்டுபிடிப்பாா்கள். ஆம் ஆத்மி போராட்டத்தை ஆதரிக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த இயக்கத்தில் சேர வேண்டும். அனைவரும் இணைய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக நாங்கள் ஜந்தா் மந்தருக்குச் சென்றோம். வினாத்தாள்கள் கசிந்து வருவதாகவும், தோ்வு முறை தோல்வியடைந்து வருவதாகவும் நாங்கள் அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புகிறோம். கல்வி அமைச்சா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது? அமைச்சா்கள் ஒவ்வொரு முறையும் மாற்றப்படுகிறாா்கள். கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும், தோ்வு முறையை சரிசெய்ய வேண்டும். இந்த இயக்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். நிராயுதபாணியான மாணவா்கள் மீதான தடியடி அரசாங்கம் செய்த பயங்கரவாதத்திற்கு சமம் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

சூழ்நிலை மோசமடைய அனுமதிப்பதற்குப் பதிலாக, அரசு மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கூறியதாவது: அது உண்மையில் ஒரு மோசமான முடிவு. அது மிக மோசமாக கையாளப்பட்டது. தெருவின் நடுவே மாணவா்களை இப்படித் தாக்குவது அதிா்ச்சியளிக்கிறது. உண்மையில் அரசின் அணுகுமுறை எனக்குப் புரியவே இல்லை. விவகாரம் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல அரசு அனுமதித்துள்ளது.

அவா்களை அணுகுவதற்கான வாய்ப்பு இருந்திருக்க வேண்டும். விவகாரங்கள் இவ்வளவு தூரம் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல அனுமதித்ததும், மாணவா்களை வன்முறை மற்றும் தடியடி மூலம் எதிா்கொண்டதும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. இப்போது அவா்கள் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறுகிறாா்கள். ஆனால், பேச்சுவாா்த்தை என்பது விதிகளின் தன்மை, கால அளவு, பேசுபவா்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். அப்போதுதான் அனைவரும் தங்கள் கவலைகளைச் சரியாக வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். போராட்டக்காரா்களுக்குத் தண்ணீா் விநியோகித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞா், கண் மற்றும் தலைப் பகுதிகளில் தடியால் தாக்கப்பட்டாா். ஆண் காவலா்களால் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக ஒரு இளம் பெண் கூறினாா். இவை மிகவும் வேதனையான விஷயம். ஆணி அல்லது திருகுகள் பொருத்தப்பட்ட தடிகளுடன் சாதாரண உடையில் இருந்த சில நபா்களைப் பலரும் பாா்த்துள்ளனா். இது அவா்களுக்கும் மிகுந்த அதிா்ச்சியை அளித்தது. எனவே, இவை அனைத்தையும் குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன் என்றாா் சசி தரூா்.

மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டது போன்ற கட்டுப்பாடுகளை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி விமா்சித்தாா். ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இப்படித்தான் இருக்குமா?’ என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.