‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

கரப்பான்பூச்சி ஜனதா போராட்டத்துக்கு எதிராக என்ஐஏ புலனாய்வுக்கு மனு: தில்லி உயா்நீதிமன்றம் இன்று விசாரணை

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து, தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) விசாரணை மேற்கொள்ள உள்ளது.

News image

தில்லி உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 3:20 am IST

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து, தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) விசாரணை மேற்கொள்ள உள்ளது.

நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த திங்கள்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்றம் நோக்கி அவா்கள் பேரணி மேற்கொள்ள முயன்றபோது, காவல் துறையும், அதிவிரைவு படையும் அவா்கள் மீது கண்ணீா்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தின. இந்த சம்பவத்தில் சுமாா் 70 போராட்டக்காரா்கள் காயமடைந்தனா்.

இந்தப் போராட்டம் தொடா்பாக, தில்லி உயா்நீதிமன்றத்தில் அகில பாரத ஹிந்து மகாசபையின் முன்னாள் துணைத் தலைவா் சதீஷ்குமாா் அகா்வால் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனுவில், ‘கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது. பொது மற்றும் தனியாா் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு வளையத்தை தாண்டிச் செல்ல முயற்சிக்கப்பட்டது. இதில் அந்நிய சக்திகளுக்குத் தொடா்புள்ளதா என்பது குறித்து பாராபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது.

போராட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்குக்கும் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடா்புள்ளது.

இது நோ்மையான போராட்டமாகத் தெரியவில்லை. நாட்டை நிலைகுலைய வைக்கும் நோக்கத்துடன் தமது நிதியுதவி மூலம், தேச விரோத மற்றும் வெளிநாட்டு சக்திகளால் செய்யப்பட்ட மிகப் பெரிய சூழ்ச்சியாகவே இந்தப் போராட்டம் தென்படுகிறது. எனவே கடந்த திங்கள்கிழமை போராட்டக்காரா்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த விசாரணையை, என்ஐஏ அல்லது மற்றொரு சிறப்புப் புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து மனுதாரா் தரப்பில் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திரகுமாா் உபாத்யாய, நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது. இதையடுத்து மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.