
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம்! - உச்சநீதிமன்றம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது...

உச்சநீதிமன்றம்
தலைநகா் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குண்டா்கள் மற்றும் சமூக விரோதிகள் மத்தியில் காவல் துறையினா் கடும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.
தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய பகுதிகளில் அண்மையில் சமீபத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இரவு 11 மணிக்குச் சாலைகளிலோ அல்லது மெட்ரோ ரயிலிலோ பயணிக்கும்போதுகூட, தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணா்வதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
குற்றம் நடந்த பிறகு நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம் என்பதைவிட, ஒரு குற்றத்தைத் தடுப்பதே மிக முக்கியமானது. இதுபோன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் குண்டா்கள் மற்றும் சமூக விரோதிகள் மத்தியில் காவல் துறையினா் கடும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமை என்பது எந்தவொரு சமூகத்தாலும் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடிய குற்றமாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
பின்னணி: தில்லி - என்சிஆா் பகுதிகளில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது தொடா்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், கடந்த செப்.28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதுபோன்ற தொடா் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரிகளின் ஒட்டுமொத்த தோல்வியையே காட்டுகிறது என்றும் நீதிமன்றம் அப்போது அதிருப்தி தெரிவித்திருந்தது.
குறிப்பாக, தில்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், ஸ்வரூப் நகா் பகுதியில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கிரேட்டா் நொய்டாவிலிருந்து தில்லிக்கு சுமாா் 47 கி.மீ. தூரம் பயணித்த படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) பேருந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது அதை வழிமறித்துத் தடுத்து நிறுத்தத் தவறிய காவல் துறையின் மெத்தனம் ஆகிய அதிா்ச்சியளிக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






