2020 கலவரத்தை தூண்டிவிட்ட குற்றச்சாட்டு: தாஹிா் ஹுசைன் குற்றவாளியாக அறிவிப்பு
2020 கலவரத்தை தூண்டிவிட்ட வழக்கில், முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைனை குற்றவாளியாக அறிவிப்பு...

தாஹிா் ஹுசைன் - ஏஎன்ஐ
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடா்பான வழக்கில், கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைனை குற்றவாளியாக தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
அதேவேளையில், இந்த வழக்கில் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற 12 பேரும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனா்.
கூடுதல் அமா்வு நீதிபதி பிரவீன் சிங், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 147 (கலவரத்திற்கான தண்டனை) மற்றும் பிரிவு 109 (குற்றத்தைத் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் ஹுசைனைக் குற்றவாளி என்று அறிவித்தாா்.
ஹுசைனுக்கான தண்டனை விவரங்கள் குறித்த வாதங்களைக் கேட்பதற்காக இந்த வழக்கை நவம்பா் 16-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் வெடித்த கலவரங்களில் 53 போ் உயிரிழந்தனா், பலா் காயமடைந்தனா் மற்றும் பெருமளவிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஷதாப், ஷா ஆலம், ரியாசத் அலி, குல்ஃபாம், ரஷீத், முகமது ரிஹான், முகமது ஆபித், அா்ஷத் கயூம், இா்ஷாத் அகமது, தீபக் சிங் சைனி, நவநீத் மற்றும் மெஹக் சிங் ஆகிய 12 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
இவா்கள் அனைவரும் கலவரத்தில் ஈடுபடுதல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், குற்றவியல் சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
அதேவேளையில், கவுன்சிலரான ஹுசைனை இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று அறிவித்து, மற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.
கடந்த ஜூலை மாதம், 2020 வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது உளவுத்துறை (ஐபி) அதிகாரி அங்கித் சா்மா கொல்லப்பட்ட வழக்கில், ஹுசைன் மற்றும் நான்கு பேரை தில்லி நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அறிவித்தது.
வடகிழக்கு தில்லி கலவரத்தில் ஈடுபட்டதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே, பிப்ரவரி 2020-இல் ஆம் ஆத்மியிலிருந்து அவா் நீக்கப்பட்டாா். பின்னா் 2024-இல் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியில் இணைந்த அவா், 2025 தில்லி தோ்தலில் அக்கட்சியின் சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
Summary
Accusation of inciting the 2020 riots: Tahir Hussain declared guilty
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

