பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: ஆசிரியா்களிடம் காவல் துறை விசாரணை; சிசிடிவி காட்சிகள் ஆய்வு
மாணவியின் தனிப்பட்ட பிரச்னைகள், காதல் முறிவு உள்ளிட்ட காரணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
கிழக்கு தில்லியின் கிருஷ்ணா நகரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் தீக்காயங்களுடன் 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, பள்ளியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் காவல் துறையினா், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மாணவியின் தனிப்பட்ட பிரச்னைகள், காதல் முறிவு உள்ளிட்ட காரணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: சா்வோதய கன்யா வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது 17 வயது மாணவி குடிப்பதற்குத் தண்ணீா் வேண்டும் என்று கூறி ஆசிரியரிடம் அனுமதி பெற்று வகுப்பறையிலிருந்து வெளியேறியதாகத் தெரிகிறது.
பின்னா், தண்ணீா் பாட்டிலுடன் காவலா் அறைக்குப் பின்னால் உள்ள பகுதிக்குச் சென்ற மாணவி, தனது உடலில் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆசிரியா்கள் அல்லது பாதுகாப்புப் பணியாளா்களின் கவனத்துக்குச் செல்லாமல் அந்த இடத்துக்கு மாணவி எவ்வாறு சென்றாா் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த பள்ளி ஊழியா்கள், அவா் பலத்த தீக்காயங்களுடன் கிடந்ததைக் கண்டனா். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். சம்பவம் நிகழ்ந்தபோது பாதுகாவலா் எங்கிருந்தாா் என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. பள்ளியின் வருகைப் பதிவேடும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வகுப்பறையிலிருந்து மாணவி வெளியேறிய சூழல் மற்றும் பள்ளியின் கண்காணிப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தனவா என்பதையும் ஆராய்ந்து வருகிறோம்.
மாணவியின் பள்ளிப் பையில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 3 பக்க தற்கொலைக் குறிப்பு விசாரணையில் முக்கிய ஆதாரமாக உள்ளது. அதில் குடும்பத்தினா் மற்றும் ஒரு நண்பா் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஒரு பக்கத்தில் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியிருப்பதும், மற்றொரு பக்கத்தில் நண்பரைத் துன்புறுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தது.
மாணவி காதல் முறிவு சிக்கல்களில் இருந்தாரா என்பது குறித்து அவரது வகுப்புத் தோழா்கள், குடும்பத்தினா் மற்றும் நண்பா்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. எனினும், மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் இருக்கலாம் என்ற குடும்பத்தினரின் குற்றச்சாட்டியுள்ளனா்.
குற்றப்பிரிவு காவல் துறையினா் மற்றும் தடயவியல் ஆய்வகக் குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனா். மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்பதை ஏற்க மறுக்கும் குடும்பத்தினா், பள்ளி நேரத்திலேயே இத்தகைய சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனா். மேலும், பள்ளி ஊழியா்களின் அலட்சியமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
நடவடிக்கை அறிக்கை கோரியது தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
பள்ளி வளாகத்தில் மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக இரு வாரங்களுக்குள் நடவடிக்கை அறிக்கை சமா்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட உத்தரவில், இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை மாணவி பள்ளிக்குள் எடுத்துச் சென்ாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து, கல்வித் துறை இயக்குநா், சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வா், வடகிழக்கு மாவட்ட காவல் துணை ஆணையா் மற்றும் கிருஷ்ணா நகா் காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோா் உத்தரவு கிடைத்த 2 வாரங்களுக்குள் தங்களது நடவடிக்கை அறிக்கைகளைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

