நெல்லை மாவட்டத்தில் "பிளாஸ்டிக் ஒழிப்பு' வெற்றி பெறுமா?

திருநெல்வேலி, டிச. 26: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி முதல் அமல்படுத்தப்பட உள்ள "பிளாஸ்டிக் ஒழிப்பு' நடவடிக்கை முழு அளவில் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.   அரசாணையின்படி 20 மைக்ரான் மற்றும்
Updated on
2 min read

திருநெல்வேலி, டிச. 26: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி முதல் அமல்படுத்தப்பட உள்ள "பிளாஸ்டிக் ஒழிப்பு' நடவடிக்கை முழு அளவில் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  அரசாணையின்படி 20 மைக்ரான் மற்றும் அதற்குமேல் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வதிலும், விற்பனை செய்வதிலும் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் உறுதியான முடிவுடன் இருப்பதே இதற்கு காரணம்.

  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் (கேரி பேக், டீ கப், ஜவுளி கடை பைகள், உணவகங்களில் சாம்பார், குருமா கட்டி கொடுக்கப்படும் பைகள் உள்ளிட்டவை) பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. அதை தடுக்க இம் மாவட்டத்தில் "பிளாஸ்டிக் ஒழிப்பு' கோஷத்தை முன்வைத்து அதற்கான நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் ஈடுபட்டுள்ளார்.

  டிசம்பர் 15ஆம் தேதிமுதல் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பதாகவும், தடையை மீறுவோருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்தார்.

  ஆட்சியரின் உத்தரவுக்கு பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசாரணையின்படி 20 மைக்ரான் மற்றும் அதற்குமேல் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது என அறிவித்து மறைமுகமான எதிர்ப்பை தெரிவித்தனர்.

  இந்நிலையில், பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை அழைத்துப் பேசிய ஆட்சியர், இந்த தடை உத்தரவை ஜனவரி 1 முதல் அமல்படுத்துவது என்றும், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தற்போது அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையிலும் மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஈடுபட்டுள்ளன.

  150 தொழிற்சாலைகள்: ""அரசாணையின்படி 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க வேண்டும் என்று ஆட்சியர் கூறியிருந்தால் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து இருப்போம். ஆட்சியர் அவ்வாறு கூறாமல் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று கூறி வருவதால், பொதுமக்கள் மத்தியில் நாங்கள் ஏதோ சட்டவிரோத தொழிலைச் செய்து வருவது போன்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாணையின்படியான எங்களது தொழிலின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்'' என்றார் நெல்லை மாவட்ட பிளாஸ்டிக் கவர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கச் செயலர் எம். ஷேக் பரீத்.

  ""இம் மாவட்டத்தில் திருநெல்வேலி, ஆலங்குளம், தென்காசி, அரியநாயகிபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 150 பிளாஸ்டிக் கவர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20 முதல் 25 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொன்றிலும் ரூ.12 லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 20 மைக்ரான் மற்றும் அதற்கு மேற்பட்ட தடிமன்களில்தான் கவர்கள், கப்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்றால் இத்தனை தொழிலாளர்களின் பிழைப்புக்கும் என்ன வழி'' என்றும் அவர் கேள்வி

எழுப்புகிறார்.

  இம் மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் 100 முதல் 150 டன் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டாலும், 25 முதல் 30 டன் வரை உள்ளூரில் விற்பனையாகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை மறைக்க முடியாது.

  ""ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை முறையாகச் சேகரித்து அழித்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும், இப்போது கிலோ ரூ.1-க்கு பிளாஸ்டிக் பொருள்களை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது. அதையே ரூ.5 வரை கொடுத்தால் சாலையில் ஒரு பை, கப்பை காண முடியாது'' என்றும் உற்பத்தியாளர்கள் யோசனை கூறுகின்றனர்.

  ""பிளாஸ்டிக்கை ஒழிக்க தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்தாலும், ஆவின் பால், ரேஷன் கடைகளில் பாமாயில் போன்றவை பிளாஸ்டிக் பைகளில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதற்கு தீர்வு என்ன?''

  பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக காகிதப் பை, கப்களை பயன்படுத்தினால் அவற்றைத் தயாரிக்க மரங்களைத்தான் அழிக்க வேண்டும். அதனால் சூழல் பாதிக்காதா? என்றும் எதிர்கேள்வியை முன்வைக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

  உற்பத்திக்கு தடை: ""அரசாணையின்படி 20 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்களையே உற்பத்தி செய்ய வேண்டும் என்றாலும், சில நிறுவனங்களில் அதைவிட குறைவான தடிமன்களில் பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை அந்த பைகளின் உற்பத்தியை நிறுத்துமாறு

கேட்டுக் கொண்டுள்ளோம்'' என்றும் ஷேக் பரீத் தெரிவித்தார். முடிவு என்ன என்பது ஜனவரியில்தான் தெரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com