உடல்நல சுற்றுலா மையமாக மேம்படும் தென்னகத்தின் "ஸ்பா'

 திருநெல்வேலி, ஜூலை 22: தென்னகத்தின் "ஸ்பா' என அழைக்கப்படும் குற்றாலத்தை உடல்நல சுற்றுலா மையமாக (ஏஉஅகபஏ பஞமதஐநப நடஞப) மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  அதற்காக, பிளாஸ்டிக் பைகளுக
Updated on
2 min read

 திருநெல்வேலி, ஜூலை 22: தென்னகத்தின் "ஸ்பா' என அழைக்கப்படும் குற்றாலத்தை உடல்நல சுற்றுலா மையமாக (ஏஉஅகபஏ பஞமதஐநப நடஞப) மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 அதற்காக, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை, அருவிகளில் சுத்தமான தண்ணீர், எண்ணெய் மசாஜ் செய்வோருக்கு முறையான பயிற்சி, அருவிகளில் துணிகளை துவைக்கத் தடை என பல அதிரடி திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன்.

 பெல்ஜியம் நாட்டின் "ஸ்பா' சுற்றுலா மையத்தில் உள்ள இயற்கை நீருற்றுகளில் குளித்தால் நாள்பட்ட நோய்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.

 தென் மேற்கு பருவ மழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் சாரல் மழை நீர் அங்குள்ள பல நூறு மூலிகைகளை தழுவி ஓடி வந்து குற்றாலத்தில் அருவியாக கொட்டுகிறது. அந்த அருவி நீரில் குளிக்கும்போது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எனவேதான், குற்றாலம் தென்னகத்தின் "ஸ்பா' என அழைக்கப்படுகிறது.

 குற்றால அருவிகளில் குளித்து மகிழ தமிழகத்தில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் உச்ச கட்ட சீசன் என்றாலும் காலநிலை மாற்றத்தால் அண்மைக்காலமாக ஜூலையில்தான் சீசன் தொடங்குகிறது. எனினும், அருவிகளில் தண்ணீர் விழுந்தால் ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

 மத்திய, மாநில சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை. குற்றாலத்தின் சிறப்பை உணர்ந்து அதைப் பாதுகாக்கும் மனப்பாங்கும் மக்களிடம் இல்லை.

 பிளாஸ்டிக் பைக்கு தடை: கடந்த மாதம் 21-ம் தேதி குற்றாலத்துக்கு வந்த தமிழக தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி அதன் அழகைக் கண்டு ரசித்தார். அப்போது குற்றாலத்தை உடல்நல சுற்றுலா மையமாக மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் ஜெயராமனை கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் ஆட்சியர்.

 முதல் கட்டமாக, குற்றாலத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் அங்கு பேரணி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை அமல்படுத்தப்படும்.

 இதற்காக ஏற்கெனவே குற்றாலம் பேரூராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்டத்துக்கான அரசின் செய்தி இதழில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

 குற்றாலத்துக்கு வருவோருக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக இலவசமாக துணிப் பைகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக முதலில் சேலம் அப்புசாமி மருத்துவமனையைச் சேர்ந்த இயற்கை பாதுகாப்பு ஆர்வலரான மருத்துவர் குமரன் 10,000 துணிப் பைகளை இலவசமாக அளிக்க உள்ளார்.

 குற்றாலத்தின் நுழைவு வாயிலில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பைகள் அகற்றப்படும். தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

 குளித்து மகிழும் அருவியில் துணிகளை துவைத்து நீரை அசுத்தப்படுத்துவதை தடுக்க ஏற்கெனவே போலீஸôருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.

 100 பேருக்கு பயிற்சி: குற்றால அருவிகளில் குளிக்க வருவோர் உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொள்வதுண்டு.

 இங்கு மசாஜ் செய்வோர் எவருக்கும் முறையான பயிற்சி இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, அவர்களில் சுமார் 100 பேருக்கு முறையான மசாஜ் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வதாக குற்றாலத்துக்கு அண்மையில் வந்து சென்ற சுற்றுலாத் துறை செயலர் வெ. இறையன்பு ஆட்சியரிடம் உறுதியளித்துள்ளார். அந்த பயிற்சியும் விரைவில் அளிக்கப்பட உள்ளது.

 அருவி தண்ணீர் சுத்தமாக இல்லை என்றும், மலைக்கு மேலே சென்று நீரோடைகளில் குளிப்பவர்களும், பல்வேறு விதங்களில் நீரை அசுத்தப்படுத்துவோராலும் அருவி நீர் மாசுபட்டு வருவதாகவும் நீண்டகால புகார் உண்டு. அதனை தடுக்கும் வகையில் தற்போது மலைக்கு மேலே சென்று செண்பகதேவி அருவி உள்ளிட்ட இடங்களில் குளிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் சுத்தமான நீர் கொட்டும் வாய்ப்பு உள்ளது.

 ""குற்றாலத்தை உடல்நல சுற்றுலா மையமாக மேம்படுத்தும் திட்டங்களை தொடங்கியுள்ளோம்.

 இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுலாத் துறை அளிக்க உள்ள ரூ. 4.52 கோடி நிதியில் ஒரு பகுதியும் இதற்காக செலவிடப்படும்.

 அடுத்த ஆண்டு முதல் குற்றாலம் முழு அளவிலான உடல்நல சுற்றுலா மையமாகத் திகழும்'' என்றார் ஆட்சியர் ஜெயராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com