தஞ்சாவூர், ஜூன் 10: ஜூன் 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லாத சூழலில், சம்பா சாகுபடிக்காவது காவிரி நீரை தமிழக அரசு பெற்றுத் தருமா என்ற கேள்வி காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் 16 ஆண்டுகள் விசாரணை நடத்தி, 2007, பிப்ரவரி 5-ம் தேதி, கர்நாடக அரசு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்துக்கு இணையான காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை பல ஆண்டுகளாக புறந்தள்ளி தன்னிச்சையான போக்கை கடைப்பிடித்து வந்த கர்நாடகம், இறுதித் தீர்ப்புக்கு பின்பும் பழைய போக்கையே கடைப்பிடிக்கிறது.
தமிழகத்தில் டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன்-12 ம் தேதி திறக்கப்பட வேண்டும். அணையில் தற்போது நீர்மட்டம் 60 அடி. நீர் இருப்பு 23 டிஎம்சி மட்டுமே. 90 அடிக்கு மேல், 40 டிஎம்சி அளவு நீர் இருந்தால் மட்டுமே அணையை பாசனத்துக்காக திறக்க முடியும்.
அணையில் நீர் பற்றாக்குறையாக இருப்பதால் ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகனும், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் மோகன கிருஷ்ணனும் ஒரே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், அங்கு அணைகள் நிரம்பினாலும் உடனடியாகத் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுவிடும் என நம்பிவிட முடியாது. டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் பெற்றுத் தரவேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்த, மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்துமா?. அப்படி வலியுறுத்தினாலும் கர்நாடக பாஜக அரசு ஏற்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த முறை திமுகவின் தயவில் மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ், திமுகவின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்த சூழலிலும்கூட தமிழகத்துக்கு காவிரி நீரை முழுமையாகப் பெற்றுத் தரவில்லை. இந்த முறை திமுகவின் ஆதரவை முழுமையாக நம்பி ஆட்சி நடத்த வேண்டுமென்ற சூழல் இல்லாத வகையில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. திமுக தயவில்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்த முடியுமென்ற சூழலில் திமுக ஏதேனும் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 17-ம் தேதி தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், டெல்டா பாசன விவசாயிகள் சார்பில் பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு போராட்டங்கள் நடைபெறலாம். மேலும் எதிர்க்கட்சிகளும் காவிரிப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் குரலெழுப்ப வாய்ப்புள்ளது.
தற்போது பெய்து வரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு வரும் தண்ணீரில் குறிப்பிட்ட சதவீதத்தை தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடக மாநில அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.
இறுதித் தீர்ப்பு குறித்து இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இடைக்காலத் தீர்ப்புப்படி ஜூன் மாதம் 10.16 டிஎம்சி, ஜூலை மாதம் 42.76 டிஎம்சி நீரைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறுவை சாகுபடி கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், தமிழக அரசு தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை உடனடியாக அணுகி, ஒரு போக சம்பா சாகுபடியையாவது உறுதி செய்ய வேண்டுமென்பதே காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.