குடும்ப அட்டை சரிபார்க்கும் பணி: வாடகை வீட்டுக்காரர்களுக்கு பிரச்னை

 சங்கரன்கோவில், செப். 9: தமிழகமெங்கும் குடும்ப அட்டைகளைச் சரிபார்க்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் இப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது பணியைப் பார்வையிட து

 சங்கரன்கோவில், செப். 9: தமிழகமெங்கும் குடும்ப அட்டைகளைச் சரிபார்க்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் இப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது பணியைப் பார்வையிட துணை வட்டாட்சியர் பொறுப்பில் மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் முறை மிகக் கடுமையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கிராமப் பகுதிகளில் குடியிருப்போர் பெரும்பாலும் சொந்த வீடுகளில் இருப்பதால், அங்கு பிரச்னைகள் பெரிதாக எழவில்லை.

 ஆனால், நகரப் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் தொடங்கி, கூலி வேலைக்கு செல்வோர் வரை பலர் வாடகை வீட்டில் குடியிருப்பதால், இவர்கள் பாடு பெரும் திண்டாட்டத்திற்குள்ளாகியுள்ளது.

 வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள், அந்த முகவரியில் தங்களது மகன்கள் அல்லது மகள்கள் பெயரில் குடும்ப அட்டைகளை வைத்திருப்பதால், அந்த வீட்டில் வாடகைக்கு இருப்போர் குடும்ப அட்டைகளைப் பெறமுடியாமல் தவித்து வரும் சூழ்நிலை உள்ளது.

 அப்படியே சிலர் குடும்ப அட்டை பெற்றிருந்தாலும் வீடுமாறும்போது, அந்த வீட்டு முகவரிக்கு ஏற்கனவே குடும்ப அட்டை இருப்பதால், பழைய குடும்ப அட்டையை வைத்தே ரேஷன் பொருள்களை வாங்கி வந்தனர்.

 இப்போது இந்த குடும்ப அட்டைகள் போலி குடும்ப அட்டைகளாக முத்திரைக் குத்தப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் 4 குடும்ப அட்டைகள் இருந்தால் அவைகளும் நீக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

 இதன்காரணமாக, வாடகை வீட்டில் இருப்போர் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர்.

 வாடகை வீட்டில் இருப்பவர்களிடம் மின்கட்டண ரசீது, வீட்டுத் தீர்வை ரசீது கேட்கப்படுகிறது. வாடகைக்கு குடியிருப்போர் தங்களது வீட்டைச் சொந்தமாக்கி விடுவார்களோ என்ற எண்ணத்தில் வீட்டு உரிமையாளர்கள் ரசீதுகளை தரமறுக்கின்றனர்.

 மேலும், குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றப்படாமலிருந்தால், அவற்றை குறிப்பதற்காக வெள்ளை நிற படிவமும், கார்டும், முகவரியும் சரியாக இருந்து பட்டியலில் பெயர் இல்லையென்றால் அதற்காக மஞ்சள்நிற படிவமும் விசாரணை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும், வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதால், தங்களது அன்றாட வேலை பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

 மேலும், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவைகளை பெற குடும்ப அட்டை தேவைப்படுகிறது.

 சங்கரன்கோவிலில் வாடகைக்கு வரும் மக்களிடம் ""இந்த முகவரியில் ரேஷன் கார்டு பதியக் கூடாது'' என்ற உத்தரவாதம் பெற்றபிறகே வீடு வாடகைக்கு விடப்படுகிறது.

 பொதுவாக வசதி படைத்தவர்கள் ரேஷன் பொருள்களை வாங்குவதில்லை.

 அதிகமாக ரேஷன் பொருள்களை வாங்கி, அதில் வாழ்க்கையை நடத்துபவர்கள் சாதாரண, ஏழை, நடுத்தர மக்கள்தான்.

 அதிலும், குறிப்பாக நகர, பெருநகரங்களில் வாடகை வீட்டில் இருப்பவர்கள்தான் அதிகம். இவற்றை அரசு கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதே அவர்களின் இப்போதைய எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com