திருநெல்வேலி, பிப். 1: தமிழ்நாட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.) புதிதாகத் தொடங்கும் மருத்துவமனைகளை மத்திய அரசே நேரடியாக மேலாண்மை செய்ய முடிவு செய்துள்ளது.
தற்போது மாநில அரசால் மேலாண்மை செய்யப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் மோசமான செயல்பாடுகள் குறித்து தொழிலாளர்கள் கூறிவரும் புகாரைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர் நலத் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
நாட்டில் சுமார் 84 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ. உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களும், இவரது குடும்பத்தாரும் என மொத்தம் 3.55 கோடி பேர் இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சுமார் 16 லட்சம் உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தாரும் என மொத்தம் சுமார் 75 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்.
இ.எஸ்.ஐ. உறுப்பினர்களுக்காக தமிழ்நாட்டில் 9 இடங்களில் மருத்துவமனைகளும், 191 இடங்களில் மருந்தகங்களும் இயங்கி வருகின்றன.
இந்த மருத்துவமனைகளையும், மருந்தகங்களையும் தற்போது தமிழக பொது சுகாதாரத் துறை நிர்வகித்து வருகிறது. இதற்காக ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூ. 1,200 வீதம் இ.எஸ்.ஐ. கழகம் தமிழக அரசுக்கு வழங்கி வருகிறது.
சரமாரி புகார்: ""மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருததுவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருப்பதில்லை. பணியில் இருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை. சிலர் மருத்துவமனைக்கு வருவதே இல்லை. மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு, மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் நோயாளிகள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களே பணியிட மாறுதல் மூலம் இங்கு நியமிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளித்த மனநிலையில் அந்த மருத்துவர்கள் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் நோயாளிக
ளிடம் நடந்து கொள்வதால் தொழிலாளர்களிடம் அதிருப்தி ஏற்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் சந்தா செலுத்துகிறார்கள் என்பதை மருத்துவர்கள் மறந்து விடுகிறார்கள்'' என மருத்துவமனைகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இது குறித்து இ.எஸ்.ஐ. கழகத்திற்கு வரும் புகார்கள் தமிழக மருத்துவத் துறைக்கு அனுப்பப்பட்டாலும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இ.எஸ்.ஐ. உறுப்பினர்கள் அதிகம் சேர்ந்துள்ள பகுதிகளில் புதிதாக மருந்தகங்களைத் திறக்க வேண்டும் என்றால் அதிலும் மாநில அரசால் காலதாமதம் ஏற்படுகிறது. இதே நிலைமைதான் நாடு முழுவதும் உள்ளதாக கண்டறியப்பட்டது.
தமிழக அரசு ஒப்புதல்: எனவே, தொழிலாளர்களின் அதிருப்தியைப் போக்கவும், அவர்களுக்கு மேம்பட்ட மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளையும், மருந்தகங்களையும் இ.எஸ்.ஐ. கழகமே நேரடியாக மேலாண்மை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதற்கான ஒப்புதலைக் கோரியபோது தமிழக அரசு மறுத்துவிட்டது.
இந் நிலையில், புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற இ.எஸ்.ஐ. கழக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், தற்போது உள்ள மருத்துவமனைகளை விட்டுவிட்டு இனிமேல் புதிதாகத் தொடங்கப்படும் மருத்துவமனைகளை இ.எஸ்.ஐ. கழகமே நேரடியாக நிர்வகிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கு தமிழகம் உள்ளிட்ட நான்கைந்து மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக இ.எஸ்.ஐ. கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை தற்போது அக் கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அடுத்து, திருநெல்வேலியில் ரூ.50 கோடியில் கட்டப்பட்டு வரும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, இதேபோல் திருப்பூரில் கட்டப்பட உள்ள மருத்துவமனை ஆகியவையும் இ.எஸ்.ஐ.யின் நேரடி மேலாண்மையின் கீழ் வரும்.
இவை தவிர, சென்னை, கோவை ஆகிய இடங்களில் இ.எஸ்.ஐ. சார்பில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது அதற்கான மருத்துவமனைகளும் இ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும் என்பதோடு குறைகளையும் அவ்வப்போது போக்க முடியும் என இ.எஸ்.ஐ. நிர்வாகிகள் நம்புகின்றனர்.
துரித பணப்பட்டுவாடா: தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட 55 தனியார் மருத்துவமனைகளுக்கு இ.எஸ்.ஐ. கழகம் அளிக்கும் கட்டணத் தொகையானது மாநில அரசு மூலமே பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. அதிலும் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டு வந்ததால் சிகிச்சை அளிக்க பெரிய மருத்துவமனைகள் தயக்கம் காட்டி வந்தன.
இப்போது அந்த நடைமுறையும் மாற்றப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணத்தை இ.எஸ்.ஐ. கழகமே 3 நாள்களுக்குள் நேரடியாக வழங்கி வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகள் தயக்கமின்றி தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருவதாக இ.எஸ்.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.