வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கொள்ளை போகும் இயற்கை வளம்!

அம்பாசமுத்திரம், பிப்.21: திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்நிலைகளில் இருந்து அனுமதியின்றி  மணல் எடுப்பது அதிகரித்து வருகிறது. வருவாய்த் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தபோதிலும் மணல் கொள்ளை ஏனோ இன்ன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:26 am

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், பிப்.21: திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்நிலைகளில் இருந்து அனுமதியின்றி  மணல் எடுப்பது அதிகரித்து வருகிறது. வருவாய்த் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தபோதிலும் மணல் கொள்ளை ஏனோ இன்னும் குறைந்தபாடில்லை.

 மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, வற்றாத ஜீவநதியாக திகழ்கிறது. தாமிரபரணியில் கருணை ஆறு, ராமநதி உள்ளிட்ட ஆறுகள் கலக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் வளம்கொழிக்கச் செய்யும் தாமிரபரணி, குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

  ஆனால், தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகளின் போக்கிடமாகி, அண்மைக்காலமாக தாமிரபரணி மாசுபட்டு வருகிறது. அத்துடன் மணல் கொள்ளையும் சேர்ந்து நீர்ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

  மணல் கொள்ளையைத் தடுப்பதற்காக அரசே மணல் குவாரிகளை நடத்த ஆரம்பித்தபோது, இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசு குவாரிகளில் மணலை வாங்கி, கேரளம் வழியாக வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும்கூட கடத்தப்பட்டது.

 இதையடுத்து, மணல் குவாரிகளின் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு, ஏற்கெனவே அள்ளி வைக்கப்பட்ட மணல் மட்டும் "யார்டுகளில்' இருந்து எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.

 இதனால், ஆற்றில் மணல் எடுப்பது குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தால், பிரச்னை புதிய வடிவத்தில் கிளம்பியுள்ளது. மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலம் அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

 இம் மாவட்டத்தில் சுத்தமல்லி, பத்தமடை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி,  அம்பாசமுத்திரம், வி.கே.புரம், பாபநாசம், கீழஆம்பூர், கடையம், பொட்டல்புதூர்  பகுதிகளில் தினமும் தாமிரபரணி ஆறு, கருணை ஆறு, ராமநதிகளில் இருந்து  நூற்றுக்கணக்கான மாட்டுவண்டிகளில் மணல் எடுக்கப்படுகிறது. டிராக்டர்களிலும் மணல் எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது.

 2005-ல் ஒரு வண்டி மணல் விலை 90 ரூபாய்தான். இப்போது அதே அளவு மணல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வீடுகளில் சிறிய கட்டடப் பணிக்குப்  பயன்படுத்த மாட்டுவண்டி மணலைதான் நம்பியிருக்க வேண்டும் என்பதால், அதைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர் மணல் கொள்ளையர்கள்.

 மணல் எடுப்பதைக் கட்டுப்படுத்த வருவாய்த் துறை அதிகாரிகளும் நடவடிக்கை  எடுத்துதான் வருகின்றனர். மாட்டுவண்டிகள், டிராக்டர், லாரிகளைப் பறிமுதல் செய்து  அபராதம் விதித்து வருகின்றனர்.

 அம்பாசமுத்திரம் வட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 200 மாட்டுவண்டிகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல டிராக்டர்கள், லாரிகளும் பறிமுதல்  செய்யப்பட்டன.

 இருப்பினும், மணல் கொள்ளை மட்டும் தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்போல இன்னும் நீடிக்கிறது. பல ஊர்களில் மணல் எடுப்பதை சிலர் தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இருந்து தப்புவதற்காக, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சென்று மணல் எடுத்து வருகின்றனர். மேலும், மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து சேமித்து வைத்து  பின்னர் டிராக்டர், லாரிகள் மூலம் வேறு பகுதிக்கு மணலை கொண்டு செல்வதாகவும் புகார் கூறப்படுகிறது.

 மாட்டுவண்டிகளில் மணல் திருடி பிடிபட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை. மாட்டுவண்டிகளை பறிமுதல் மட்டுமே செய்கின்றனர். டிராக்டர், லாரிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது.

 இந்த சட்டத் தளர்வைப் பயன்படுத்தி மாட்டுவண்டிகளில் மணல் திருடுவதுதான் அதிகமாக நடக்கிறது.

 எனவே, மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். மாட்டுவண்டிகளுக்கும் அபராதம் விதித்து இயற்கைச் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.