அழிக்கப்படும் இயற்கை வளம்:​ அல்லல்படும் மக்கள்

கருங்கல், ஜன. 3: கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரியால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகவும், பாறைத் துகள்கள் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் தாங்கள் பல்வேறு நோய்களால் பா

கருங்கல், ஜன. 3: கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரியால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகவும், பாறைத் துகள்கள் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் தாங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இயற்கை வளம்மிக்க இம் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கிவருகின்றன. மலைகளை உடைத்து கருங்கல், ஜல்லி, பாறைத் துகள்கள் என பிரித்து தேவைக்கேற்ப பயன்படுத்துகின்றனர். இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் தாராதட்டு மலைப் பகுதியில் கல்குவாரியுடன் கிரஷர் யூனிட்டும் செயல்படுகிறது.

இக் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். எனவே, அவர்களை மிரட்டியும், பணம்கொடுத்தும் இப் பகுதியில் கல்குவாரி தொழில் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

சக்திவாய்ந்த வெடிப்பொருள்களைப் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதால் வெடித்துச் சிதறும் பாறைத் துண்டுகள் அப் பகுதியில் உள்ள வீடுகள் மீது விழுகின்றன. இதனால், மக்கள் உயிரையும், உடைமையையும் காக்க வழியின்றி அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாறைகளை உடைப்பதால் ஏற்படும் சப்தம் மற்றும் நில அதிர்வு காரணமாக அப் பகுதிகளில் உள்ள வீடுகளின் சுவர்களில் வெடிப்பு, கீறல்கள் ஏற்பட்டு, சுவர்கள் எப்போது விழுமோ என்ற நிலை உருவாகியுள்ளது. கிரஷர் இயந்திரம் மூலம் உடைக்கப்படும் பாறைகளிலிருந்து கிளம்பும் பொடித் துகள்கள் காற்றில் பரவி அப் பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், இருமலை ஏற்படுத்துகிறது. காற்றும், தண்ணீரும் மாசுபட்டு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் அவலநிலை குறித்து ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பல புகார்கள் கொடுத்தும் பயனில்லை என மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்

ஜே. ஜோபிரகாஷ் கூறும்போது, மாவட்டத்தில் அதிகளவில் பாறைகள் பெயர்த்தெடுக்கப்படுவதால், இயற்கை வளம், மலைவளம் அழிகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை (வேளிமலை) இன்னும் சில ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் போகும் அபாயம் உள்ளது. மரங்கள் அழிந்த நிலையில் பாறைகளும் கணிசமான அளவு கொள்ளைப் போய்விடும். பாறைத்துகள்கள் கலந்த காற்றைச் சுவாசிக்கும் மக்கள் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவர். எனவே, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com