ஏ.வி.எம்.​ கால்வாயில் நீர்வழிப் போக்குவரத்து அமைக்கப்படுமா?

கருங்கல், ஜன. 10: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோடி முதல் மணக்குடி வரை நீர்வழிப் போக்குவரத்து அமைக்கப்படுமா என மாவட்ட மக்களிடையே நீண்ட காலமாக மிகுந்த எத

கருங்கல், ஜன. 10: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோடி முதல் மணக்குடி வரை நீர்வழிப் போக்குவரத்து அமைக்கப்படுமா என மாவட்ட மக்களிடையே நீண்ட காலமாக மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இக்கால்வாய்க்கு திருவிதாங்கூர் அரசின் குலதெய்வமான அனந்த பத்மநாப சுவாமி பெயரும், ஆங்கிலேய அரசுடன் ஏற்பட்டுள்ள நட்புணர்வைக் குறிக்கும் விதத்தில் விக்டோரியா மகாராணி பெயரும், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டம் பிள்ளையின் பெயரும் சேர்த்து ஏ.வி.எம். கால்வாய் என பெயர் சூட்டப்பட்டு இத்திட்டம் துவக்கப்பட்டது.

கேரள மாநிலம், வடக்கு பரவூர் துவங்கி பூவார் வழியாக நீரோடி, இரயுமன்துறை, தேங்காய்ப்பட்டினம், மிடாலம், குளச்சல் வரை நீர்வழிப் போக்குவரத்து முதல் கட்டமாக இயக்கப்பட்டது.

பின்னர் இந்த கால்வாய்க்கு நெய்யாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் திருப்பிவிடப்பட்டு 1867-ல் மண்டைக்காடுவரை இந்த போக்குவரத்து நீட்டிக்கப்பட்டது.

இதனால் கேரளம், கன்னியாகுமரி இடையே வாணிபம் சிறந்து விளங்கியது. கடற்கரை கிராமங்களில் உப்புநீர் உள்புகுவது தடுக்கப்பட்டு நன்னீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன. மேலும் நீர்வழிப் போக்குவரத்தால் குமரி மக்கள் திருவனந்தபுரம் சென்றடைய எளிதாக இருந்தது.

இப்படி பல்வேறு வகைகளில் பயன்பட்ட ஏ.வி.எம். கால்வாய் ஆக்கிரமிப்புக்குள்ளாகி நீரோடையாகவும், குப்பை மேடுகளாகவும், புல் புதர்களாகவும், பாசி நிறைந்த குட்டைகளாகவும் காட்சியளிக்கிறது.

இதையடுத்து பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையையடுத்து 2007-ம் ஆண்டு தமிழக பொதுப் பணித் துறை செயலர் ஆதிஷேசையா இந்த பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு இத்திட்ட அறிக்கையை அரசுக்கு அளித்தார். இருந்தபோதும் பலனில்லை. ஆனால் இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இதையடுத்து, இச்சீரமைப்புப் பணியின் முதல்கட்டமாக (2009 டிசம்பர்) கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு தலைமையில் ஹீல் தொண்டு நிறுவனமும், குளச்சல் நகராட்சியும் இணந்து கொட்டில்பாடு -சைமன்காலனி வரை 3 கி.மீ. தொலைவுக்கு ஏ.வி.எம். கால்வாயில் தூர்வாரும் பணியினை துவங்கி அப்பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கிள்ளியூர் எம்.எல்.ஏ. எஸ். ஜான்ஜேக்கப் கூறும்போது, இத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயம் பெருகும், வாணிபம் செழிக்கும், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும், போக்குவரத்து நெருக்கடியும் குறைந்து இந்த பகுதிகளில் சுகாதாரம் மேம்படும்.

எனவே இது குறித்து டிசம்பர் 2-ம் தேதி நாகர்கோயிலுக்கு வந்த துணை முதல்வருடன் பேசியுள்ளதாகவும் அதற்கு மத்திய அரசு உதவியுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நாகர்கோவில் ஹீல் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சிலுவை வஸ்தியான் கூறும்போது, முட்டம், குளச்சல் துறைமுகப் பணிகள் துவங்கியுள்ளன. தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பணி துவங்க உள்ளன.

எனவே கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீர்வழிபோக்குவரத்து அமையும் போது மண்டைக்காடும் ஒரு சுற்றுலாத் தலம் ஆகும்.

மேலும் நான்குவழி கடற்கரைசாலையில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்றார்.

எனவே ஏ.வி.எம். கால்வாய் வழியாக நீர்வழிப் போக்குவரத்தை துவக்கும் திட்டத்தை துவங்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிகை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com