திருநெல்வேலி, ஜூலை 14: திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரையில் தென் மேற்குப் பருவ மழை வழக்கமான அளவு பெய்துள்ள போதிலும் திருநெல்வேலி, பாளையங் கால்வாய் பாசனப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் கார் பருவ சாகுபடி பொய்த்துள்ளது.
இம் மாதம் 20 ஆம் தேதி இவ்விரு கால்வாய்களுக்கும் பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடப்பட உள்ள தண்ணீர் குடிநீருக்காக மட்டுமே பயன்படுமே தவிர, நெல் பயிரிடுவதற்கான காலம் கடந்து விட்டதால் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பாசன நிலங்கள் தரிசு நிலமாகவே காட்சி அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை காலத்தில் இம் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனா, ராமநதி, அடவிநயினார், கருப்பாநதி உள்ளிட்ட அணைகள் மூலம் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஜூன் மாதம் நாற்றுபாவி
ஜூலை, ஆகஸ்டில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு இதுவரையில் வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடை
மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன் கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டாரங்களில் முழுமையாகவும், கடையநல்லூர், செங்கோட்டை, தென்காசி ஆகிய வட்டாரங்களில் பகுதியாகவும் என சுமார் 6,500 ஹெக்டேரில் மட்டுமே நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் வரை நடவு பணிகள் நடைபெறும் என்பதால் மேலும் சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ஹெக்டேர் வரையில் சாகுபடி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளான திருநெல்வேலி, பாளையங்கோட்டை கால்வாய்களில் இதுவரை தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் இவ்விரு கால்வாய்களின் பாசனப் பகுதிகளான சுமார்
6 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் கார் பருவ சாகுபடி தொடங்கப்படவில்லை.
வளமையான மழை அளவு: பாபநாசம் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் இவ்விரு கால்வாய்களுக்கும் முன்னரே தண்ணீர் திறந்துவிட திறக்க இயலவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் 29.1 மி.மீ. (வழக்கமான மழை அளவு 29.6 மி.மீ.) மழையும், ஜூலையில் இதுவரையில் 26 மி.மீ. (வழக்கமான மழை 26.4 மி.மீ.) மழையும் பெய்துள்ளது. எனினும், கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கமான 131.3 மி.மீ. மழையைவிட மிக குறைவாக 43.08 மி.மீ. மழையே பெய்துள்ளது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலை ஏற்பட்டுவிட்டதாக வேளாண்மை துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டும் இதேபோல் அணையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதால் திருநெல்வேலி, பாளையங் கால்வாய் பாசனப் பகுதிகளில் கார் பருவ சாகுபடி நடைபெறவில்லை. இதர சில பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் கார் பருவ சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்விரு கால்வாய் பாசனப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது பாபநாசம் அணையில் சுமார் 52 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. மழையை எதிர்நோக்கி இம் மாதம் 20 ஆம் தேதி திருநெல்வேலி, பாளையங் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. அந்த தண்ணீர் கார் பருவ சாகுபடிக்காக அல்ல என்றும் குடிநீருக்காக மட்டுமே என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனினும், தற்போது நாற்றுபாவி வைத்துள்ள தருவை, முன்னீர்பள்ளம், கல்லூர், சுத்தமல்லி, பேட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அந்த தண்ணீரைக் கொண்டு சுமார் 200 ஹெக்டேர் நிலங்களில் நடவு பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீரைக் கொண்டு இனிமேல் நாற்றுபாவி நடவு செய்தால் வட கிழக்கு பருவ மழையால் அறுவடை பாதிக்கப்படும் என விவசாயிகள் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த ஆண்டும் திருநெல்வேலி, பாளையங் கால்வாய் விவசாயிகளுக்கு கார் பருவம் பொய்த்துபோகும் நிலையே ஏற்பட்டுள்ளது.
வீட்டுமனைகளாகும் ஆபத்து: இவ்விரு கால்வாய் பாசனப் பகுதிகளில் பெரும்பாலானவை திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகரப் பகுதிக்குள்ளும், நகரைச் சுற்றிலுமே அமைந்துள்ளன. இப்பகுதிகளில் முப்போகம் நெல் விளைந்து வந்த காலங்கள் உண்டு. அந்த நிலை மாறி இருபோகம் விளைந்து வந்தது. அப்படி இருந்தும் விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி உள்ளன.
இந்த சூழ்நிலையில், இப்போது இரு போக நெல் (கார், பிசானம்) விளைச்சலுக்கும் வழி இல்லாமல் ஒரு போகú ம (பிசானம்) உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்கள் எல்லாம் வேகமாக வீட்டுமனைகளாகும் ஆபத்தும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.