சங்கரன்கோவில்: 10 ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு இல்லை

சங்கரன்கோவில், ஜூன் 28: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ஏராளமானோர் மனு செய்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அ

சங்கரன்கோவில், ஜூன் 28: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ஏராளமானோர் மனு செய்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சங்கரன்கோவில் ஊராட்சியாக இருந்து 1.4.1964-ல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. 1978-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998 முதல் கடந்த 12 ஆண்டுகளாக முதல்நிலை நகராட்சியாகவும் உள்ளது.

இங்கு 30 வார்டுகள் உள்ளன. 2001 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 55,606. இங்கு கோட்டமலையாறு, தாமிரபரணி, மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்கள் மூலம் தலா 20 லட்சம் லிட்டர் வீதம் நாளொன்றுக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, விநியோகிக்கப்பட வேண்டும்.

தாமிரபரணித் திட்டம் மூலம் பெறப்படும் தண்ணீரின் அளவு அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது வெகுவாகக் குறைந்து, ஒருசில லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது. மொத்தத்தில் தினமும் சுமார் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, 3 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது.

நகரில் உள்ள 15,076 குடியிருப்புகளில் இதுவரை 6688 குடியிருப்புகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதி 8388 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இவர்கள் ஏற்கெனவே இணைப்பு உள்ளவர்களிடம் மாதந்தோறும் குடிநீருக்குப் பணம் செலுத்தி, வீட்டின் உரிமையாளர் தண்ணீர் பிடித்து முடித்தபிறகு தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். இந்த அவல நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.

இதனால் நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் முழுவதும், ஏற்கெனவே இணைப்பு வைத்திருப்பவர்களுக்குப் போய்ச் சேருகிறது. ஆனால், இதுபற்றி நகராட்சி நிர்வாகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

1998ஆம் ஆண்டு குடிநீர் இணைப்புக்கு ரூ.1000 வைப்புத்தொகையாக இருந்தபோது, 1500 பேர் குடிநீர் இணைப்பு கேட்டு மனு செய்திருந்தனர். இவர்களில் 500 பேருக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டதாம். 2005-ல் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ரூ.3000 ஆகவும், 2007-ல் ரூ.9000 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதோடு சரி, யாருக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

1992-ல் தாமிரபரணி திட்டம் வந்தபோது, அதற்கான செலவைத் திரும்பப் பெறும் வகையில் சங்கரன்கோவிலில் வீட்டுவரி 12 சதவீதம் உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அரசு பொது வரி உயர்வை விதித்தபோது, அப்போதும் வீட்டுவரி உயர்த்தப்பட்டது. இதனால் இரட்டிப்பு வரியை செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

மற்ற நகராட்சிகளில் பாதி மானியம், பாதி கடன் என்கிற வகையில் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால், சங்கரன்கோவிலில் மானூர் குடிநீர்த் திட்டம் முழுவதும் கடனாகப் பெற்று செயல்படுத்தப்பட்டது.

இதனை திருப்பிச் செலுத்துவதற்காக குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ரூ.9000 என குடிநீர் வடிகால் வாரியம் நிர்ணயித்தது.

அருகில் உள்ள நகராட்சிகள் மற்றும் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகளில் கூட அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.3000 முதல் ரூ.5000 வரைதான் உள்ளது. அதையே நிர்ணயிக்க வேண்டும் என்றும், ரூ.9000 வைப்புத்தொகை கூடாது என்றும் நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான கோப்புகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு ஓராண்டாகியும் இன்றுவரை பதில்இல்லை.

3.8.2009 வரை குடிநீர் இணைப்பு கேட்டு 1636 பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்த மனுக்கள் இன்றும் நிலுவையில் உள்ளன. மேலும் பலர் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவாறு உள்ளனர்.

குடிநீர் இணைப்புகளுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கட்டண விதிகளுக்கு உள்பட்டு எண்ணிக்கையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி குடிநீர் இணைப்புகள் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குடிநீர்

இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என, 2007-ல் அரசாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பிறகும் சங்கரன்கோவில் மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

குடிநீர் இணைப்புக்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்களுக்கு புதிய குடிநீர் இணைப்பை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com