மடைகளை சீரமைக்க ரூ. 5 கோடி கிடைக்காமல் அல்லல்படும் விவசாயிகள்

திருநெல்வேலி, ஜூன் 29: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குளங்களில்  பழுதடைந்துள்ள மடைகள் மற்றும் நீர் வழிந்தோடிகளைச் சீரமைக்க அரசிடம் ரூ.5.40  கோடி நிதி கேட்டு ஆண்டுகள் பல ஆகியும் இதுவரை பதில் இல்லை.  த
Updated on
3 min read

திருநெல்வேலி, ஜூன் 29: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குளங்களில்  பழுதடைந்துள்ள மடைகள் மற்றும் நீர் வழிந்தோடிகளைச் சீரமைக்க அரசிடம் ரூ.5.40  கோடி நிதி கேட்டு ஆண்டுகள் பல ஆகியும் இதுவரை பதில் இல்லை.

 தற்போது குளங்கள் வறண்டுள்ள சூழ்நிலையில், அடுத்து வடகிழக்குப் பருவமழை  தொடங்கும் முன்பு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து மடைகளைச் சீரமைத்தால்  இந்த ஆண்டாவது விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்த புண்ணியம் அரசுக்கு கிடைக்கும்.

 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து விவசாயம் பிரதானத்  தொழிலாக உள்ள மாவட்டம் திருநெல்வேலி. இம் மாவட்டத்தில், பாபநாசம்,  மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு என 11 அணைகள் மூலம்  921 கால்வரத்து குளங்களும், 1,528 மானாவரி குளங்களும் என மொத்தம் 2,449 குளங்கள் உள்ளன. குளங்கள் மற்றும் நேரடி கால்வரத்து மூலம் வழக்கமாக மொத்தம்  சுமார் 1.46 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

 அதிலும் இந்த ஆண்டு கூடுதலாக 17 ஆயிரம் ஹெக்டேருடன் மொத்தம் 1.63  லட்சம் ஹெக்டேரில் விவசாயம் செய்ய வேளாண்மை துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.  இதில் 92 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரும், 26,200 ஹெக்டேரில்  சிறுதானியங்களும், 20,200 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்களும் பயிரிட வேண்டும்  என்பது இலக்கு.

 மாவட்டத்தில் கால்வரத்து குளங்களைவிட, மானாவாரி குளங்களின் எண்ணிக்கையே  அதிகம். இந்த குளங்களில் எந்தக் காலத்தில் மராமத்துப் பணிகள் நடைபெற்றன  என்பது அந்தப் பகுதி விவசாயிகளுக்கே தெரியாத நிலை உள்ளது. சில குளங்களில்  மராமத்துப் பணிகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டாலும் அவை சில சட்டி மண்ணை  அள்ளி கரையில் போட்டு காசு பார்த்துவிட்டு போன கதையாகத்தான் விவசாயிகள்  கூறுகின்றனர். எனவே, குளங்களில் அவற்றின் முழுக் கொள்ளளவில் இன்று பாதியோ  அல்லது மூன்றில் ஒரு பங்குதான் நீர் நிரம்பும் சூழ்நிலை உள்ளது. எனவேதான், கடந்த  காலங்களில் ஒருமுறை குளம் நிரம்பினால் அந்தப் பகுதி வயல்காடுகள் எல்லாம் விளைந்துவிடும் சூழ்நிலை மாறி இன்று இரண்டு, மூன்று முறை குளங்கள் நிரம்ப வேண்டிய  நிலை உள்ளது.

 இது ஒருபுறம் என்றால் பருவமழையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதும்  கண்கூடு. அப்படியே சில ஆண்டுகள் அதிகமான மழை பெய்தாலும், மொத்த மழை  அளவு அதிகமாக இருக்குமே தவிர, மழை பெய்த நாள்கள் குறைவாகவே இருந்து  வருகின்றன. ஓரிரு நாள்களில் பெருமழை பெய்து எங்கும் வெள்ளக்காடு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து, தேங்கிய நீர் வடிந்து மீண்டும் வறட்சி என்பதுதான் கண்ட  பலனாக உள்ளது.

 இந்தச் சூழ்நிலையில், பெய்யும் குறைவான மழைநீரைச் சேமித்து வைக்கவும், குறைந்த  நாள்களே பெய்யும் மழையால் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்தவும் குளங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட குளங்களின் நிலையோ  மிகவும் பரிதாபமாக இருப்பதுதான் விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

 பெரும்பாலான குளங்களின் மதகுகளும், உபரிநீர் வழிந்தோடிகளும் உடைந்து  சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் குளத்துக்கு வரும் நீரை முறையாகப்  பயன்படுத்தவோ, தேக்கிவைக்கவோ முடியாமல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத  நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

 விவசாயிகளின் பல ஆண்டுகால இந்த பரிதவிப்புக்கு தீர்வுகாண 2008-ல் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ், மடைகள் மற்றும்  உபரிநீர் வழிந்தோடிகள் சேதமடைந்துள்ள குளங்களை கணக்கிட்டு அவற்றைச்  சீரமைக்க தாமிரபரணி வடிநிலக் கோட்டத்திற்கு ரூ.2.57 கோடியும், சித்தாறு வடிநிலக்  கோட்டத்திற்கு ரூ.2.83 கோடியும் என மொத்தம் ரூ.5.40 கோடி தேவை என அரசுக்கு  கருத்துரு அனுப்பினார். ஆண்டுகள் மூன்றாகியும் இதுவரை பதில் இல்லை. விவசாயிகள்  கையேந்தி நிற்கின்றனர்.

 எனவே, இப்போதைய மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் அந்த திட்ட  அறிக்கையை புதுப்பித்து கடந்த ஆண்டு முதல்வர் கூட்டிய மாவட்ட ஆட்சியர்கள்  மாநாட்டுக்கு சென்றபோது கையோடு எடுத்துச் சென்று பொதுப்பணித் துறை  செயலரிடம் நேரடியாக அளித்தார். அதுவும் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் கிடக்கிறது.

 இப்போது மாவட்டத்தில் உள்ள 1,528 மானாவாரி குளங்களும், கால்வரத்து குளங்களில் பெரும்பாலானவையும் வறண்டுதான் கிடக்கின்றன.

எனவே, இப்போது  உடனடியாக அரசு நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டால்  அடுத்துவரும் வடகிழக்குப் பருவமழை காலத்திலாவது பெய்யும் மழைநீர் குளத்தில்  தேங்கும்.

விவசாயிகள் முகம் மலரும். இன்னும் காலதாமதம் செய்தால் இந்த ஆண்டும்  மழைநீர் குளத்தில் தேங்காது. கடலுக்குதான் போய்ச் சேரும். கழனி விளையாது.

 சுமார் ரூ.310 கோடி செலவில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கண்ட தமிழக  முதல்வர், இந்த ரூ.5.40 கோடியை ஒதுக்கி விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்க  வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

களக்காடு வட்டாரத்தில் குளங்கள் வறண்டதால் கால்நடைகள் தவிப்பு

களக்காடு, ஜூன் 29: களக்காடு வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள் தண்ணீரின்றி  முழுவதுமாக வறண்டதால் கால்நடைகள் குடிக்க தண்ணீரின்றி மிகவும் சிரமப்படுகின்றன.

 களக்காடு வட்டாரத்தில் வடக்குப் பச்சையாறு மூலம் பாசனம் பெறும் குளங்கள்  உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள்  கடந்த மார்ச் மாதமே தண்ணீர் வற்றி வறண்டுவிட்டன.

 மே மாத இறுதியில் வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒரு சில குளங்களில் மட்டும் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தது.  

இந்நிலையில், சாரல்மழை பரவலாகப் பெய்யாததால் ஆறுகளை எட்டிப்பார்த்த தண்ணீர்  குளங்களுக்குப் போய்ச்சேரவில்லை.

 இதைத் தொடர்ந்து, களக்காடு வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள்  தற்போது முழுவதுமாக வறண்டுவிட்டன. இதனால் குளத்துப் பாசனத்தை மட்டுமே  நம்பியிருந்த விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும்,  மேய்ச்சலுக்காக குளங்களில் முகாமிட்டுள்ள கால்நடைகள், குடிக்க தண்ணீரின்றி பெரிதும்  சிரமப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com