வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாசனத்தை உறுதி செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

அம்பாசமுத்திரம், மார்ச் 6: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் உபரிநீரை கொண்டு செல்ல ரூ. 369 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நதிநீர் இணைப்புத் திட்டத்தின

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:19 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், மார்ச் 6: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் உபரிநீரை கொண்டு செல்ல ரூ. 369 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நதிநீர் இணைப்புத் திட்டத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  தாமிரபரணி வடிநிலப் பாசனம் செழிப்பான பாசனப் பகுதி. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இருப்பினும் திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம், எம்.எல் தேரி பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. மழைக் காலங்களில் சராசரியாக 13,800 மில்லியன் கனஅடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, வீணாகக் கடலில் கலக்கும் நீரை வறட்சி பகுதிகளுக்கு வழங்கும் வகையில் நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

   தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு முன்னோடியாக தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு, கருமேனி ஆறு, நம்பியாறு ஆகிய 6 நதிகளை இணைத்து நதிநீர் இணைப்புத் திட்டம் ரூ. 369 கோடியில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத் திட்டத்தின் மூலம் இவ்விரு மாவட்டங்களில் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியும்.

  இத் திட்டத்தின் கீழ், கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வெள்ளங்குழியில் இருந்து எம்.எல் தேரிக்கு 73 கி.மீ. தொலைவுக்கு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது.  கன்னடியன் கால்வாய் அணைக்கட்டில் 6.5 கி.மீ. தொலைவில் இருந்து சாத்தான்குளம் எம்.எல். தேரிக்கு கால்வாய் வெட்டப்படுகிறது. இக் கால்வாய் 3,200 கனஅடி நீர் கடத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

   இக் கால்வாய் அமைவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 23,040 ஹெக்டேர் பரப்பளவு நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம் 1.82 லட்சம் டன் நெல் கூடுதலாக உற்பத்தி செய்யலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 171 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 75 குளங்களும் பயன்பெறும்.

   ஆண்டுதோறும் வீணாகக் கடலில் கலக்கும் நீரில் 2,765 மில்லியன் கனஅடி நீரை வெள்ளநீர் கால்வாய் மூலம் வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பி விடமுடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

  திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்தில் கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், கஸ்தூரிரங்கபுரம், திசையன்விளை, முதுமொத்தான்மொழி, உறுமன்குளம், பாளையங்கோட்டை வட்டத்தில் செங்குளம், தருவை, புதுக்குளம், இட்டேரி, சிவந்திப்பட்டி, நான்குனேரி வட்டத்தில் நாளந்தாகுளம், ஆழ்வார்னேரி, பருத்திப்பாடு, புதூர், மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி, கருங்கடல், கூந்தன்குளம், திருமலாபுரம், சடையனேரி, விஜயநாராயணம், இலங்குளம், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும்.

  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம், மீரான்குளம், பன்னம்பாறை, பழங்குளம், கட்டேரிமங்கலம், உடையார்குளம், வெள்ளமடம், குறிப்பன்குளம், எழுவரைமுக்கி, நெடுங்குளம், கோமானேரி, அரசூர், திருச்செந்தூர் வட்டத்தில் பிடானேரி, வேலாங்குளம் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும்.

  பணிகள் தீவிரம்: தற்போது இக் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் இவ்விரு மாவட்டங்களில் வறட்சிப் பகுதிகளும் பயன்பெறும்.

ஏற்கெனவே பாசனம் பெற்று வரும் பகுதிகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். தமிழகத்தில் முதல் நதிநீர் இணைப்புத் திட்டம் தாமிரபரணி பாசனத்தை உறுதி செய்யும் வகையில் அமையும்.

  கடந்த 2009 அக்டோபரில் திட்டத்தை ஆய்வு செய்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இத் திட்டம் 2012 ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.

கன்னடியன் கால்வாய் பாசனம் பாதிக்கும்?

நதிநீர் இணைப்புத் திட்டப்படி வெள்ளநீர் கால்வாய், கன்னடியன் கால்வாயில் கல்லிடைக்குறிச்சி அருகே கோரையாறு சந்திப்பில் வெள்ளங்குழியில் இருந்து தொடங்குகிறது. எனவே, இத் திட்டத்திற்காக கன்னடியன் கால்வாய் அணைக்கட்டில் இருந்து வெள்ளங்குழி வரை 6.5 கி.மீ. தொலைவில் இக் கால்வாய் அகலப்படுத்தப்படுகிறது. 450 கனஅடி நீரை கடத்தும் திறன் கொண்ட கன்னடியன் கால்வாயினை 3,200 கனஅடி நீர் கடத்தும் வகையில் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  தற்போது இக் கால்வாய் அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக் கால்வாயை அகலப்படுத்தி உபரிநீரைக் கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தினால் கன்னடியன் கால்வாய் பாசனம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இக் கால்வாய் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  அதாவது, வெள்ளங்குழிக்கு கிழக்கே கோபாலசமுத்திரம் கொத்தன்குளம் வரை பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே கன்னடியன் கால்வாய் பாசனம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.