தேவையை நிறைவு செய்யுமா புதிய குடிநீர் திட்டம்
கடையநல்லூர்,ஏப்,24: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர்ப் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் கடையநல்லூர் பகுதிவாழ் பொதுமக்கள், ரூ. 21.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குடிநீர்த் த


கடையநல்லூர்,ஏப்,24: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர்ப் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் கடையநல்லூர் பகுதிவாழ் பொதுமக்கள், ரூ. 21.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குடிநீர்த் திட்டம் எதிர்கால தேவையை நிறைவு செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் பெரிய நகராட்சிப் பகுதியாகும். மொத்த பரப்பு 52.25 சதுர கிலோ மீட்டர்.
இப்போதைய நிலையில் இங்குள்ள மக்கள்தொகை 90,100 ஆகும். வாரிய மக்கள்தொகை கணக்கின்படி 2025-ம் ஆண்டு மக்கள்தொகை 1,13,300 இருக்கும் எனவும், 2040-ம் ஆண்டு இந்நகராட்சியின் மக்கள்தொகை 1,42,000 இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடையநல்லூரில் மொத்த வரிவிதிப்புகள் சுமார் 22,639. இதில் 17,000 வரிவிதிப்புகள் குடியிருப்புக்களுக்கான வரி விதிப்புக்களாகும். 13,332 குடிநீர் இணைப்புக்கள் இந்நகராட்சியில் உள்ளன.
1973 முதல் கருப்பாநதி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
2003-ம் ஆண்டு முதல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கடையநல்லூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இவ்விரண்டு திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 68 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
ஆனால், கருப்பாநதி அணையில் தண்ணீர் இன்மையாலும், மின் தடை உள்ளிட்ட காரணங்களாலும், பகிர்மானக் குழாய்களின் சீரற்ற நிலையினாலும் குறிப்பிட்ட அளவு குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், குடிநீர்ப் பிரச்னை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ.வின் முயற்சியால் ரூ.21.41 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 2040-ம் ஆண்டின் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் நாளொன்றுக்கு தேவைப்படும் சுமார் ஒரு கோடியே 41 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க முடியும் என திட்டத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்காக கருப்பாநதி அணைக்கட்டின் தலைமையிடத்துக்கு அருகே 35 மீட்டர் தடுப்பணை கட்டவும், அந்தப் பகுதியில் 6 மீட்டர் விட்டமும், 22 மீட்டர் ஆழமும் கொண்ட 5 கிணறுகளை புதிதாகத் தோண்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. (இதில் 2 கிணறுகள் பெரியநாயகம்கோயில் பகுதியிலும், 3 கிணறுகள் கல்லார் பகுதியிலும் அமைக்கப்படவுள்ளன.)
மேலும் அங்கு 11 புதிய மின் நீரேற்றிகளும், அனைத்து நீரேற்றிகளுக்கும், மாற்று நீரேற்றிகளும் அமைக்கப்படவுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே நகராட்சிப் பகுதியிலுள்ள 6 மேல்நிலைத் தொட்டிகள், புதிதாக அமைக்கப்படவுள்ள 7 மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, அவற்றிலிருந்து புதிதாக பதிக்கப்படவுள்ள சுமார் 94,000 மீட்டர் பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் சீராக வழங்கப்படும் எனவும் குடிநீர் வடிகால் வாரிய விளக்கவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்பணிகள் தேர்தல் நடத்தை விதிகளால் தொய்வடைந்துள்ளன.
இருப்பினும் மக்களின் அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்வதற்காக நீண்டகாலத்துக்குப் பின்னர் கொண்டு வரப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளபடி 18 மாதங்களில் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...