ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு
அம்பாசமுத்திரம், பிப். 8: வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் நீண்டவரிசையில் பல மணி நேரம் க


அம்பாசமுத்திரம், பிப். 8: வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் நீண்டவரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், ரேஷன் கடைகளிலும் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
வெளிச்சந்தையில் சர்க்கரை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சர்க்கரை கிலோ ரூ. 32, துவரம் பருப்பு ரூ.72, உளுத்தம் பருப்பு ரூ.60, மல்லி ரூ.66, வத்தல் ரூ.110 ஆக உள்ளது. பாமாயில் லிட்டருக்கு ரூ.62 ஆகவும் உள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக, இதுவரை வெளிச்சந்தையில் பொருள்கள் வாங்கியவர்களும் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
அரிசி, சர்க்கரை ஆகியன பெரும்பாலும் 100 சதவீத குடும்ப அட்டைகளுக்கும் கிடைத்துவிடுகிறது. ஆனால், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் போன்ற பொருள்கள் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் கிடைப்பதில்லை. சில நாள்களிலேயே காலியாகிவிடுவதாக கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் பிப்ரவரி 1-ம் தேதிமுதல் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலையைக் குறைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கிலோவுக்கு ரூ.40-ல் இருந்து ரூ.30 ஆகவும், பாமாயில் பாக்கெட் ரூ.30-ல் இருந்து ரூ.25 ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள், பாமாயில் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பல்வேறு ஊர்களில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ரேஷன் கடைகள் பகுதிநேர கடையாகச் செயல்படுகின்றன. கடந்த சில தினங்களாக அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிகமாகத் திரண்டதால் போலீஸ் பாதுகாப்புடன் இரவு வரை பொருள்கள் வழங்கப்பட்டன.
முழுமையாக வழங்கப்படுமா? பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, சர்க்கரை ஆகியன குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படுகிறது. பாமாயில், பருப்பு வகைகள், கோதுமை போன்ற பொருள்கள் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், தட்டுப்பாடு காரணமாக 70 முதல் 80 சதவீத குடும்ப அட்டைதாரர்களே அவற்றைப் பெற முடிகிறது. இப்பொருள்களை அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் வழங்கும் வகையில் ரேஷன் கடைகளுக்கு அரசு முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு: கேஸ் அடுப்பு இல்லாதவர்கள், ஒரு கேஸ் அடுப்பு மட்டும் பயன்படுத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. சமீப காலமாக தேவை அதிகரித்துள்ளதால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெளிச்சந்தையிலும் மண்ணெண்ணெய் போதிய அளவு கிடைப்பதில்லை.
எனவே, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...