அரசு திட்டப்பணிகள் கட்டுமானப் பணிகள் தேக்கம்
அம்பாசமுத்திரம், பிப். 12: தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள், கட்டுமானப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் கட்டடத் தொழிலாளர்கள் வேலை


அம்பாசமுத்திரம், பிப். 12: தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள், கட்டுமானப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் கட்டடத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி நதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான நதியாகும். இந்நதியில் கருணை ஆறு, ராமநதி ஆகியன கலக்கின்றன.
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் அரசு மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு பெருமளவில் மணல் விற்கப்பட்டன.
இந்நதியில் இருந்து எடுக்கப்பட்ட மணல் அதிகளவில் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விற்பனை செய்யப்பட்டன.
அரசு குவாரிகள் மூலம் மணல் எடுக்கப்பட்டாலும், அனுமதியின்றி வாகனங்களில் பெருமளவில் மணல் கடத்தலும் நடைபெற்றன. மேலும் உள்ளூர் தேவைகளுக்காக மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவில் மணல் எடுக்கப்பட்டதால் தற்போது தாமிரபரணி நதியில் மணல் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும் ஆறுகளில் குடிநீர் திட்டங்கள் அமைந்துள்ள பகுதியில் மணல் எடுத்ததால் குடிநீர் திட்டங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கிடையே இந்நதியில் இருந்து பெருமளவில் மணல் எடுக்கப்பட்டதால் நதியின் போக்கும் மாறி விட்டது. நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே தாமிரபரணி நதியில் இருந்து மணல் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மணல் எடுக்கத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து தாமிரபரணி நதியில் இருந்து வாகனங்களில் மணல் கடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மணல் கடத்துவோர் மீது காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்தனர்.
அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதைத் தடுக்க வருவாய்த்துறை, காவல்துறை நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் உள்ளூர் தேவைகளுக்காக ஆற்றுப்படுகையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்பட்டு வந்தது.
இதன் மூலம் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் கிடைத்தது. அரசு திட்டப்பணிகளுக்கும் குறிப்பிட்ட பகுதியில் இருந்து மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து வந்த தொழிலாளர்கள் மீது போலீஸôர் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் மட்டும் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் மாட்டு வண்டியில் மணல் எடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டப்பணிகளுக்கு மட்டும் ஒரு சில இடங்களில் குவாரி அமைத்து மணல் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் மணல் தட்டுப்பாடு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இம்மாவட்டத்தில் அரசுத் திட்டப்பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாட்டு வண்டிகளில் மணல் எடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் எடுப்பது முற்றிலும் குறைந்துள்ளது. ஆனால் கட்டுமானப் பணிகளுக்கு மணல் கிடைப்பது அரிதாகவிட்டது.
இதனால் கட்டடத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ஆற்றுப்படுகையில் இருந்து மணல் எடுóப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். கட்டுமானப்பணிகளின் தேவைக்கு மட்டும் மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...