"மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை'

திருநெல்வேலி, ஜன. 8:மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என அகில இந்திய பல்கலைக் கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜேம்ஸ் வில்லியம் கூறினார். திருநெ
Updated on
2 min read

திருநெல்வேலி, ஜன. 8:மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என அகில இந்திய பல்கலைக் கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜேம்ஸ் வில்லியம் கூறினார்.

திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:

கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப்பேரவையிலும் மக்கள் பிரச்னைகள் றித்து விவாதம் நடந்ததில்லை. எதிர்கட்சிகள் எதிர்த்து பேசினால் ஒடுக்கப்படுகின்றனர்.

அரசு வளங்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சுரண்டுகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்தபோதும் ஊழல் இருந்தது. ஆனால் இப்போது தேசத்தின் கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற பணம் கைமாறுகிறது.உலகமயமாக்கல் கொள்கையால் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய அரசியல்வாதிகளின் பணத்தை மீட்டால், நாட்டில் வரி இல்லாத பட்ஜெட் தயாரிக்கலாம்.   அரசின் அடிப்படை சேவை என்பது இப்போது வியாபார பொருளாக மாறி விட்டது.

  குடிநீர், கல்வி, சுகாதாரம் இவை அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. இது தொடர்ந்தால், ஜனநாயகத்துக்கு ஆபத்து.

  காலியிடங்களை நிரப்பவும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை தரக்கோரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட வேண்டிய நிலை உள்ளது என்றார் அவர்.

  அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வி பேசியது:

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு கேட்பதாக இல்லை. பலமுறை தலைமைச் செயலரைச் சந்தித்தும் முதல்வரை இன்னும் சந்தித்து பேச முடியவில்லை. ஆனால் அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை அளித்து இருப்பதாக போலியான தோற்றத்தை அரசு உருவாக்கி உள்ளது.

  அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு ஒரு போலியான சங்கம் உருவாக்கப்பட்டு அந்த சங்கம் முதல்வருக்கு பாராட்டு, நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துகிறது.

  போராடி பெற்ற உரிமைகள் பறிபோகும் போது, கேட்கமால் வழங்கப்பட்ட சலுகைகள் எப்போது பறிக்கப்படும் என்பது தெரியாது. உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர், பழிவாங்கப்படுகின்றனர்.

  அரசு ஊழியர் இல்லாமல், அரசு சக்கரம் சுழலாது என்பதை மட்டும் அரசு உணர வேண்டும் என்றார் அவர்.

  அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் இரா. சீனிவாசன், மாநிலப் பொருளர் என். இளங்கோ, மாநிலச் செயலர் என். குமாரவேல், இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொருளர் க. ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., எஸ். நூர்முகமது, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே. கங்காதரன், முன்னாள் துணைத் தலைவர் என். ஜெயச்சந்திரன் ஆகியோர் பேசினர். 

  முன்னதாக, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்டப் பொதுச் செயலர் செ. முத்துகுமாரசாமி வரவேற்றார்.

  ஞாயிற்றுக்கிழமை காலை விவாதமும், பிற்பகலில் சிறப்புக் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com