மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முறியடிக்க அதிமுக திட்டம்?

திருநெல்வேலி, மார்ச் 3: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தவிர்த்து வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவதற்கான மறைமுக செயல் திட்டத்துக்கு அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.
Updated on
2 min read

திருநெல்வேலி, மார்ச் 3: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தவிர்த்து வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவதற்கான மறைமுக செயல் திட்டத்துக்கு அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் 64-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்து, தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த இயந்திரத்தில் முறைகேடுகளைச் செய்து பதிவாகியுள்ள வாக்குகளை தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தன. எவருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க மீண்டும் வாக்குச்சீட்டு முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அரசியல் கட்சிகளின் புகார்களுக்கு அவ்வப்போது தகுந்த விளக்கம் அளித்து வந்துள்ள தேர்தல் ஆணையம், மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவரும் திட்டம் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனினும், வாக்களித்தவர் தான் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளுவதற்கான வசதியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இச் சூழ்நிலையில், நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தான் பயன்படுத்தப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மறைமுகமான செயல் திட்டம் ஒன்றை செயல்படுத்த அதிமுகவினர் தயாராகி வருவதாக அக் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இரண்டு பகுதிகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குப்பதிவு பிரிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயரையும், அவர்களுக்கான சின்னத்தையும் பதிவு செய்யலாம். போட்டியிடும் வேட்பாளர்கள் அதற்கு மேல் இருந்தால் அதிகபட்சம் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்படியானால் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 64-க்குள் இருந்தால் மட்டுமே அத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் வேட்பாளர்களின் எண்ணிக்கை இருந்தால் அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. மாறாக, வாக்குச்சீட்டு முறையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

இந்த நடைமுறைச் சிக்கலைப் பயன்படுத்திக்கொண்டு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் 64-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தை நிர்பந்தப்படுத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் தகுதியான, குற்ற வழக்குகள் இல்லாத அதிமுக தொண்டர்கள் 70 முதல் 75 பேரை அடையாளம் கண்டு அவர்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளும்படி அதிமுக தலைமையிடமிருந்து மாவட்டச் செயலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார். மற்றவர்கள் அனைவரும் சுயேச்சைகளாக களமிறங்குவர் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இந்தப் பணியை மாவட்டச் செயலரின் மேற்பார்வையில் அதிமுக வழக்கறிஞர் அணியினர் மேற்கொள்ள வேண்டும் என்றும், தேர்வு செய்யப்படுவோர் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரபலமான நபர்களைப் போட்டியிட வைத்தால் அவர்களால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதே காரணம். தேர்வு செய்யப்படுவோர், எதிர்க்கட்சிகளிடம் குறிப்பாக, திமுகவிடம் "விலை' போகாதவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமான அறிவுரையாகும்.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இம் மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதிமுக தலைமையின் அறிவுரைப்படி "சுயேச்சை வேட்பாளர்களை' தேடும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதியில் காவல் நிலையங்களில் வழக்குகள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாத 70 சரியான நபர்களைத் தேர்வு செய்ய அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்டச் செயலர்களுக்கும் கட்சியின் மேலிடத்தில் இருந்து வந்துள்ள தகவலின் அடிப்படையில் அவர்களும் தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com