வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நதியைப் போலவே பறவைகளும் அழியும் அபாயம்!

அம்பாசமுத்திரம், ஜன. 30: தாமிரபரணி நதி விவசாயத்துக்கு மட்டுமன்றி, பறவைகளின்  வாழ்விடமாகவும் திகழ்கிறது. ஆனால், நதியைப் போலவே, இந்தப் பறவையினங்களும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. பொதிகை மலையில் உற்பத்தியாக

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:53 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், ஜன. 30: தாமிரபரணி நதி விவசாயத்துக்கு மட்டுமன்றி, பறவைகளின்  வாழ்விடமாகவும் திகழ்கிறது. ஆனால், நதியைப் போலவே, இந்தப் பறவையினங்களும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

பொதிகை மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 120 கி.மீ. தொலைவுக்குப் பாயும் தாமிரபரணி நதி, இவ்விரு மாவட்ட மக்களுக்கும்  வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. தாமிரபரணி பாசனத்தில் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள்  பயன் பெற்று வருகின்றன.

தாமிரபரணி நதி சார்ந்துள்ள இவ்விரு மாவட்டங்களில் உள்ள குளங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.  திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம் சிறந்த பறவைகள் சரணாலயமாக விளங்குகிறது. இதேபோல, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருப்புடைமருதூருக்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வருகை தருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளம் என்ற குளத்துக்கும் பறவையினங்கள் வருகின்றன. இவை தவிர தாமிரபரணி நதி, நதியைச்  சார்ந்துள்ள குளங்களிலும் ஆயிரக்கணக்கான பறவையினங்கள் இனப்பெருக்கம் செய்ய  வருகை தருவது கண்டறியப்பட்டுள்ளது. தாமிரபரணி பாசனத்தில் கடம்பாகுளம், மானூர் குளம், தென்கரைக்குளம்,  விஜயநாராயணம் குளம், நான்குனேரி குளம், மேலப்புதுக்குடி சுனை, களக்காடு  முண்டன்துறை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள குளங்களுக்கு பறவையினங்கள் அதிகளவில் வருகை தருகின்றன.

பொதுவாக, நவம்பர் மாதத்தில் வருகை தரும் பறவையினங்கள் இங்குள்ள மரங்கள், நீர்நிலைகளில் வசிக்கின்றன. பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்ய போதுமான  மரங்கள், நீர்நிலைகள் இருப்பதாலும், தேவையான உணவு கிடைப்பதாலும் பறவையினங்கள் இங்கு அதிகளவில் வருவதாகக் கூறப்படுகிறது. நாமத்தலை வாத்து, ஊசி வாத்து, வரித்தலை வாத்து, நீலச்சிறகு வாத்து ஆகியவை இனப்பெருக்கம் செய்வதற்காக வரும் வாத்தினங்களாகும்.

கொக்கினங்கள், நாரைகள், அரிவாள் மூக்கன், நீர்க்காகங்கள் போன்றவையும் அதிகளவில் உள்ளன. வக்கா, பாம்புத்தாரா, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, நத்தைக்குத்தி  நாரை, கூளக்கிடா என 57 வகையான 36,303 பறவைகள் இந்நதி, நதி சார்ந்த பகுதியில் வசிப்பது தெரியவந்துள்ளது. ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளத்தில்  மட்டும் 15 வகையான 11,000 பறவைகள் உள்ளன. மத்திய ஆசியா, சைபீரியா,  தென்ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து இப்பறவையினங்கள் வருகின்றன. கருவால் மூக்கன், கருங்குறுகு, தண்ணீர் கோழி ஆகியன அரிதாகக் காணப்படுகின்றன.

பறவைகளுக்கு ஆபத்து:  மணிமுத்தாறு அகத்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கை வனப் பாதுகாப்பு மையம், தூத்துக்குடி இயற்கை சங்கம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்தப் பணியில் பறவையியலாளர்கள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், கணினி  மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் 42 பேர் ஈடுபட்டனர்.

கழிவுகள் கொட்டப்படுதல், ஆக்கிரமிப்பு, சாக்கடைநீரைக் கலப்பது என தாமிரபரணி நதி சந்திக்கும் அதே அழிவை, இந்தப் பறவையினங்களும் சந்தித்து வருகின்றன.  தாமிரபரணி நதி, குளங்களில் அதிகளவில் கொட்டப்படும் குப்பைகள், கழிவுகளால்  ஏற்படும் மாசு, மணல் குவாரிகள், பறவைகளை வேட்டையாடுதல் போன்ற இன்னல்களால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. வாகைக்குளத்தில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதாலும் பறவைகள் அழியும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி நதி, நதி சார்ந்த குளங்கள், மரங்கள் போன்ற இயற்கைச் செல்வங்களைப்  பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பறவைகள் அதிகளவில் வசிக்கும் இடத்தை  பறவைகள் காப்பகமாக அறிவித்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். நதி, குளங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.