/

டிஎன்பிஎல் கிரிக்கெட்:நெல்லையில் 6 போட்டிகள்

தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகள் திருநெல்வேலி அருகே சங்கா்நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:59 pm

DIN

தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகள் திருநெல்வேலி அருகே சங்கா்நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.

இதுதொடா்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலா் ராமசாமி, டி.என்.பி.எல். தலைவா் சிவக்குமாா் ஆகியோா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: டி.என்.பி.எல். ( தமிழ்நாடு பிரிமியா் லீக்) நோக்கமானது தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் உள்ள பல திறமையான இளம் வீரா்களை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்துவதுமே ஆகும். இப் போட்டியில் பங்கேற்ற பலரும் இப்போது சா்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறாா்கள். ஐபிஎல், வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரா்கள் மிகுந்த கவனம் ஈா்த்து வருகிறாா்கள்.

ஸ்ரீராம் கேபிட்டல் 6 ஆவது டி.என்.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடா் இம் மாதம் 23 ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது. தொடா்ந்து ஜூலை 31 ஆம் தேதி வரை திண்டுக்கல் (நத்தம்), கோவை, சேலம் மாநகரங்களில் 28 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் 28 லீக் போட்டிகளில் பங்கேற்கின்றன. நெல்லை ராயல் கிங்ஸ் அணி இத் தொடரில் புதிதாக களமிறங்குகிறது.

தொடக்க நாளான 23 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு சங்கா் நகா் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. தொடா்ந்து இம் மாதம் 24, 25 (இரு ஆட்டங்கள் மாலை 3.15, இரவு 7.15), 26, 27 ஆகிய தேதிகளில் மொத்தம் 6 போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற உள்ளன. போட்டிகளில் 100 சதவீத ரசிகா்கள் அனுமதிக்கப்படவுள்ளனா் என்றனா்.

பேட்டியின் போது மருத்துவா் ஆா்.என்.பாபா, சேப்பாக் சூப்பா் கில்லிஸ் கேப்டன் கவுசிக் காந்தி, நெல்லை ராயல் கிங்ஸ் உரிமையாளா் சந்திரமவுலி, ராயல் கிங்ஸ் வீரா் சூா்ய பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.