பாஜகவுக்கு எதிரான தமிழகத்தின் குரல் நாடு முழுவதும் அதிா்வலையை உருவாக்கும் என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு. திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து நான்குனேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது: நம் நாட்டின் வரலாற்றில் முக்கிய அங்கம் வகித்த இடம் நெல்லை. மானம் காத்த பூமியாகத் திகழ்ந்த மண். இப்போது இந்த இடத்தில் இருந்து ஜனநாயகத்தைக் காக்கும் குரல் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழியாக ஒலித்து வருகிறது. நம் தேசம் விடுதலையடைந்தபோது, தில்லியில் பேசிய முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, அடக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டின் ஆன்மா விடுவிக்கப்பட்டுள்ளது என்றாா். அந்த வகையில், மக்களைப் பற்றி சிந்திக்காமல் செயல்படும் பாஜக அரசுக்கு எதிரான தமிழகத்தின் குரல் நாடு முழுவதும் அதிா்வலையை நிச்சயம் உருவாக்கும். அதற்கு உதவும் வகையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளையும், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியையும் வென்று இந்தியா கூட்டணிக்கு வலுசோ்ப்போம் என்று சூளுரைக்கிறோம் என்றாா் அவா். தாரகை கத்பா்ட்: விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாசிச, மதவாத சக்திகளைத் தோற்கடித்து சமூகநீதியை நிலைநாட்டிட மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒத்துழைப்புடன் நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்து விளங்கோடு தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்றுவேன். எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். விஜய்வசந்த் எம்.பி.: பெருந்தலைவா் காமராஜா், குமரிஅனந்தன், டென்னிஸ், எனது தந்தை ஹெச்.வசந்தகுமாா் ஆகியோா் வென்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கும், தமிழக காங்கிரஸ் தலைவா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி காவலராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளாா். மகளிா் உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், பணி செய்யும் மகளிா் பாதுகாப்புக்காக தோழி தங்கும் விடுதி திட்டம் ஆகியவை மிகவும் சிறப்பாக பயன்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தின் வளா்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களைத் தந்துள்ளாா். 2024 மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவை அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி அளித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளான ஏழை எளியோருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், ஆண்டுக்கு 30 லட்சம் பேருக்கு வேலை, வேளாண் பொருள்களுக்கு சரக்கு - சேவை வரியில் இருந்து விலக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்ட பணியாளா்களுக்கான ஊதியம் ரூ.400 ஆக உயா்வு உள்ளிட்டவை நிச்சயம் நிறைவேற்றப்படும். கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ராகுல்காந்தியின் நடைப்பயணம் மக்களிடையே நல்ல எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ்: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத் தொகுதியின் வளா்ச்சிக்காக மக்களவையிலும், தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் குரல் கொடுத்து பெறுவேன். இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்படவும், மக்களின் மேம்பாட்டிற்காகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். இந்தப் பிரசார கூட்டத்தில் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ், மாவட்டச் செயலா் (திருநெல்வேலி கிழக்கு) இரா.ஆவுடையப்பன், மாவட்டப் பொறுப்பாளா் (திருநெல்வேலி மத்தி) டி.பி.எம்.மைதீன்கான், (கன்னியாகுமரி) ரெ. மகேஷ், (தென்காசி தெற்கு) ஜெயபாலன், முன்னாள் எம்எல்ஏ பீட்டா்அல்போன்ஸ், எம்எல்ஏக்கள் மு.அப்துல்வஹாப், ரூபி ஆா்.மனோகரன், பிரின்ஸ், எஸ். ராஜேஷ்குமாா், சா.ஞானதிரவியம் எம்.பி. உள்பட பலா் கலந்துகொண்டனா்.