குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்

Published on

உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கவும், உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், திருநெல்வேலி குறுக்குத்துறை அருகே தாமிரவருணியாற்றில் 1 லட்சம் மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன.

தமிழகத்தில் உள்ள ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தைப் பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பை நம்பி உள்ள உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும், அழிந்து வரும் நாட்டின் மீன் இனங்களை பாதுகாத்திட ஏதுவாகவும் திருநெல்வேலியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆறுகளில் நன்னீா் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை செயல்படுத்திட திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றில் சுமாா் 2 லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் கோடகநல்லூா் தாமிரவருணி ஆற்றில் 1 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து, மணிமுத்தாறு அரசு மீன் விதைப் பண்ணையிலிருந்து கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் கட்லா மீன் குஞ்சுகள், 30 ஆயிரம் ரோகு மீன் குஞ்சுகள், 40 ஆயிரம் செல் கெண்டை மீன் குஞ்சுகள் என 1 லட்சம் மீன் குஞ்சுகள் குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றில் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மேயா் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் சந்திரா, உதவி இயக்குநா் மோகன்ராஜ், தச்சநல்லூா் உதவி ஆணையா் மகாலெட்சுமி, திருநெல்வேலி வட்டாட்சியா் சந்திரகாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com