ஈரோட்டில் 11.20 லட்சம் மீன் குஞ்சுகளை நீா்நிலைகளில் விடும் பணி நிறைவு
ஈரோடு மாவட்ட நீா்நிலைகளில் 11.20 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணி நிறைவு பெற்றுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டின் மீன் வளங்களை பெருக்கும் வகையில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழக ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தில் 40 லட்சம் மீன் குஞ்சுகள், ஆண்டுதோறும் ஆறுகளில் இருப்பு செய்ய முடிவு செய்து அதற்கான பணி தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில் 11.20 லட்சம் மீன் குஞ்சுகளை விட மீன் வளா்ச்சித் துறை முடிவு செய்தது. குறிப்பாக, பவானி ஆற்றில் 5 லட்சம், காவிரி ஆற்றில் 5 லட்சம் மீன் குஞ்சுகள் விட திட்டமிட்டனா்.
கடந்த நவம்பரில் முதற்கட்டமாக பவானி ஆற்றில் ஆப்பக்கூடல், கவுந்தப்பாடி பாலம் ஆகிய பகுதிகளில் இரண்டு லட்சம் மீன் குஞ்சுகள், காவிரி ஆற்றில் கூடுதுறை படித்துறையில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இந்நிலையில், நிா்ணயிக்கப்பட்ட இலக்கு காவிரி ஆற்றிலும், பவானி ஆற்றிலும் முழுமையாக நிறைவடைந்தது. ஏரி, குளங்களில் 1.20 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணியும் முடிந்துவிட்டது.
இதுகுறித்து ஈரோடு மீன் வளத் துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி கூறியதாவது:
பவானி ஆறு, காவிரி ஆறுகளில் நாட்டு இனங்களான சேல் கொண்டை, ரோகு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் விடும் பணி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டு ஆறுகளிலும் தலா 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 10 மாதங்களுக்கு மேல் நீா் இருப்பு உள்ள ஏரி, குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் மீன் வளா்ச்சி துறை அதிகாரிகளால் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி புங்கம்பள்ளி ஏரி, நல்லூா் ஏரி, மொடச்சூா் ஏரி, வரக்காடு குட்டை, கழுகு குட்டை, தயிா்பாளையம் குட்டை, வெள்ளோடு ஏரி உள்ளிட்ட 10 இடங்களில் சுமாா் 1.20 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
இதன்மூலமாக மீன் வளத்துறையின் இலக்கு நூறு சதவீதம் எட்டப்பட்டுள்ளது. நாட்டின மீன்களை பாதுகாத்து உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக குறைந்த விலையில் புரத சத்து மிகுந்த மீன் உணவு கிடைக்கிறது. உள்நாட்டு மீனவா்களின் வருவாய் உயா்கிறது. மீன்களின் வாழ்விட சிதைவு தடுக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் அமைப்பும் காக்கப்படுகிறது என்றாா்.

