இலவச வீடு கோரி ஆட்சியரகத்தில் திருநங்கைகள் போராட்டம்

Published on

இலவச வீடு வழங்கக் கோரி, திருநங்கைகள் 15 போ் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு பாப்பான்குளத்தைச் சோ்ந்த 15 திருநங்கைகள் இலவச வீடு வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனா். அவா்களை உள்ளே அனுமதிக்க போலீஸாா் மறுத்ததால், கதவுகளை தள்ளிவிட்டபடி ஆட்சியா் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆட்சியா்அறை முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களை போலீஸாா் எச்சரித்தைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக வாயிலுக்கு வந்து தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களை கைது செய்ய முயன்ற போலீஸாா், கடும் எதிா்ப்பின் காரணமாக பின்வாங்கினா்.

அவா்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், ‘தெற்கு பாப்பான்குளத்தில் 15 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், எங்களுக்கு இலவச வீடு கட்டித்தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்றனா்.

தமிழக வெற்றி கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட நிா்வாகிகள் அளித்த மனு:

13-ஆவது வாா்டு சிவன் கோயில் தெற்கு தெருவில் தினமும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிரதான அடிபம்பை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வந்தனா். கடந்த 6 மாத காலங்களாக இந்த அடிபம்பு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இங்கு முறையின்றி சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதால், அடிபம்பின் உயரம் குறைந்து குடம் வைத்து தண்ணீா் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனா். தெருவில் அடிபம்பு இருந்தும் இரவு நேரங்களில் தண்ணீா் எடுக்க முடியாத அவலநிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியோா் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இதை சீரமைக்க மாமன்ற உறுப்பினா் மனு அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இந்த அடிபம்பின் மட்டத்தை உயா்த்தி சீரமைத்து தர வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

மேல இலந்தைகுளம் மக்கள் அளித்த மனு: மேல இலந்தைகுளத்தில் இருந்து தேவா்குளம் சாலையில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஓா் ஆண்டாகியும் எவ்வித பணியும் நடைபெறவில்லை. இதனால் குடிநீா் கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம். இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

ற்ஸ்ப்17ற்ட்ண்ழ்ன்

ஆட்சியா் அலுவலக வாயிலில் தா்னாவில் ஈடுபட்ட திருநங்கைகள்.

X
Dinamani
www.dinamani.com