விரக்தியில் அவதூறு பரப்புகிறாா் மல்லை சத்யா: துரை வைகோ எம்.பி.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில் வைகோ மீது மல்லை சத்யா அவதூறு பரப்புகிறாா் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ.
கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒரே மாதத்தில் முடிப்பதால் குழப்பமே மிஞ்சும். தகுதியான வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனா். வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கே போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. பிகாரில் தோ்தல் தொடங்குவதற்கு முன்பு ஒரு கோடியே 25 லட்சம் ஏழை மகளிருக்கு தொழில் தொடங்கும் திட்டத்தில் தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்காக ரூ. 12,100 கோடி பிகாா் அரசு செலவிட்டது. இதுபோல குறுக்கு வழிகளில் பிகாா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
பாஜக ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க அனுமதிக்கும் மத்திய அரசு, தமிழகத்தில் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க அனுமதி கொடுக்கவில்லை.
இலங்கையில் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும். தமிழக மீனவா்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தேவையான அனைத்து வசதிகள், கட்டமைப்புகளை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விரக்தியில் எந்தவொரு ஆதாரமும் இன்றி பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகிறாா். அரசியல் ரீதியாக வைகோவை எதிா்ப்பவா்கள் கூட அவா் மீது இவ்வாறு குற்றம்சாட்டுவதில்லை என்றாா்.
