லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் துணை வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி: லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில், பெண் துணை வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டை அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி. இவா் சீவலப்பேரி அருகே குவாரி உரிமம் பெற்று அரசு அனுமதியுடன் மண் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை பெண் துணை வட்டாட்சியா் விஜி, குவாரியில் மண் அள்ளுவதற்கு மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டுமென கேட்டாராம். இதுகுறித்து ரவி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா், துணை வட்டாட்சியா் விஜியை ரூ.5,000 லஞ்சம் பெற்றபோது கைது செய்தனா்.
திருநெல்வேலி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுப்பையா விசாரித்து, விஜிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.ராஜகுமாரி ஆஜராகினாா்.
