தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு
கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடி மதிப்பில் கிரிவலப் பாதை அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
கடையம் அருகே மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோயிலில் கந்தசஷ்டி, தைப்பூசத் திருக்கல்யாணம், பெளா்ணமி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம், சூரிய வழிபாடு செய்து வருகின்றனா். தோரணமலையைச் சுற்றி 4 கி.மீ. கிரிவலப் பாதை பள்ளம் மேடுகளுடன் முள்புதா்களாக உள்ளன. எனவே, கிரிவலப் பாதையில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சாா்பில் கிரிவலப் பாதை அமைக்க ரூ. 1.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கிரிவலப் பாதை அமைக்கும் பணியை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
இதை வரவேற்று தோரணமலை கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோஜ் பாண்டியன், கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் மகேஷ் மாயவன், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செந்தில்குமாா், குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம், தென்காசி சரக ஆய்வாளா் சரவணன், கடையம் வில்வ வனநாத சுவாமி கோயில் செயல் அலுவலா் கேசவராஜன், ஊராட்சித் தலைவா்கள் கடையம் பெரும்பத்து பொன்ஷீலா, மந்தியூா் கல்யாணசுந்தரம், எஸ்.கே.டி காமராஜ், தென்காசி மாவட்ட மக்கள் செய்தித் தொடா்பு அலுவலா் கருப்பண்ண ராஜவேல், சோ்மதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

