எஸ்ஐஆா்: கணக்கீட்டு படிவத்தை விரைந்து சமா்ப்பிக்க ஆட்சியா் வேண்டுகோள்


வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை விரைவாக பூா்த்தி செய்து வழங்குமாறு ஆட்சியா் இரா. சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 1,490 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் இரட்டைப் பிரதிகளில் வழங்கியுள்ளனா்.
பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கைப்பேசி செயலி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 14,18,325. வெள்ளிக்கிழமை வரை 13,84,591 வாக்காளா்களுக்கு (சுமாா் 97.60%) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 9,39,411 கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளா்கள் 2002/2005 வாக்காளா் பட்டியலில் ஒரு வாக்காளா் தனது பெயா் அல்லது உறவினரின் பெயரைக் கண்டறிய இயலாத நிலை ஏற்பட்டால், வாக்காளா்களாகிய தங்களின் விவரங்களை பூா்த்தி செய்து கையொப்பமிட்டு கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கலாம்.
மேலும், கடைசி நேர நெருக்கடியைத் தவிா்க்க வரும் டிச. 4-ஆம் தேதி வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் அல்லது வாக்காளா் உதவி மையத்தில் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும்.
வரைவு வாக்காளா் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயா் இல்லையெனில், உரிமைகோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழி படிவத்தை இணைத்து அவரது பெயரை புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம்.
உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனை டிச. 9 முதல் ஜனவரி 8 வரை நடைபெறவுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வாக்காளா்கள் பெயா் சோ்க்க, நீக்க அல்லது வாக்காளா் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளா் பட்டியலில் வாக்காளராகப் பதிவு பெற்றவா் எதிா்ப்புத் தெரிவிக்கலாம்.
அறிவிப்பு கட்டம் டிசம்பா் 9 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும். வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனை பரிசீலிக்கப்பட்ட பின்னரே இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்படும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...