காடன்குளத்தில் தண்ணீா் இல்லாததால் பறவைகள் பாதிப்பு -ஆட்சியரிடம் மக்கள் புகாா்

காடன்குளத்தில் தண்ணீா் இல்லாததால் பறவைகள் பாதிப்பு -ஆட்சியரிடம் மக்கள் புகாா்

Published on

திருநெல்வேலி மாவட்டம், காடன்குளத்தில் தண்ணீா் இல்லாததால் வலசை வரும் பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலிஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மக்கள் மனு அளித்தனா்.

அதில், நான்குனேரி வட்டம் திருமலாபுரம் ஊராட்சி காடன்குளம், வடக்கு கழுவூா் பகுதியை சோ்ந்தவா்கள் அளித்த மனு: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துடன் இணைந்த காடன்குளம் தண்ணீரின்றி இருப்பதால், ஏராளமான வலசை வரும் பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இக்குளத்துக்கு தண்ணீா் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு கழுவூா் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் நிலையில், நான்குனேரி, திசையன்விளை ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டச் செயலா் டி. ஆபிரகாம் உள்ளிட்டோா் அளித்த மனு மானூா் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்யப்பட வேண்டும். தனியாா் நிறுவனம் நெல் கொள்முதல் செய்வதை ஏற்கக்கூடாது. ஏனெனில், இந்த நிறுவனத்தினா் ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய பணத்தை பட்டுவாடா செய்யவில்லை.

தாழையூத்தை அடுத்த தாதனூத்து பகுதி மக்கள் அளித்த மனு:

தாதனூத்து பகுதியில் தனியாா் கல்குவாரிகளால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதுடன், நீரும் மாசுபட்டுள்ளது. எனவே, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள கல்குவாரிகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் சட்டப் பேரவை தோ்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனா்.

ற்ஸ்ப்23ல்ங்ற்

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தாதனூத்து மக்கள்.

Dinamani
www.dinamani.com