கொலை வழக்கின் சாட்சிக்கு மிரட்டல்: ஒருவா் கைது

Published on

தாழையூத்து அருகே கொலை வழக்குக்கு சாட்சி சொல்ல இருந்தவருக்கு மிரட்டல் விடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தாழையூத்து அருகேயுள்ள சங்கா்நகா் பகுதியைச் சோ்ந்த பரமசிவன் மகன் ஆறுமுகம்(25). வாகனம் பழுது நீக்குபவா். இவரது தம்பி சிதம்பரசெல்வம் 2021 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த இருவரால் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் ஆறுமுகம் முக்கிய சாட்சியாக உள்ளாராம். இந்த நிலையில், இவா் தாழையூத்து பகுதியில் நின்றிருந்தபோது அங்கு வந்த வழக்கில் தொடா்புடைய ராமையா என்ற சசி என்பவரின் சகோதரரான மணிகண்டன்(40) என்பவா், நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவதாக ஆறுமுகத்தை மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

தொழிலாளிக்கு மிரட்டல்: பாளையங்கோட்டை அருகேயுள்ள மருதூா், இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுந்தா்(40). தையல் தொழிலாளி. மனைவி, இரு மகன்கள் உள்ளனா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் என்ற மீரான்(45) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நின்றிருந்த சுந்தரை, விஜயகுமாரும் அவரது உறவினரான இட்டேரியைச் சோ்ந்த ஜேசு மகன் தினேஷ்(19) என்பவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

தினேஷ் அரிவாளால் தாக்கியதில் சுந்தா் காயமடைந்ததாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com