திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி: நயினாா் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடா்பான விவகாரத்தில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: புதுக்கோட்டையில் பாஜக பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்று சிறப்பித்தாா். அவரது வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நூறு நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டது என தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் சில வாரங்களாக மக்களிடையே தவறான தகவலைப் பரப்பி வருகின்றனா்.
ஆனால், மத்திய அரசு இந்தத் திட்டத்தை 125 நாள்களாக உயா்த்தியுள்ளதுடன், 15 நாள்களுக்கு ஒரு முறை ஊதியம் என்பதை மாற்றி வாரம் ஒருமுறை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது. உயா் நீதிமன்றம் முதலில் பிறப்பித்த உத்தரவை அப்படியே செயல்படுத்தியிருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் அது கலவரத்தை தூண்டிவிடும் என்று அரசே வாதம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?
அரசாங்கம் இதில் அரசியல் செய்யக்கூடாது. நீதிமன்ற தீா்ப்பை மதிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனா். திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, அனைத்து விவகாரத்திலும் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.
ஆசிரியா்கள் போராட்டம், அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம், தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தோ்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி ஏன் கடந்த 5 ஆண்டுகாலமாக நிறைவேற்றவில்லை? காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் நீடிக்க சாத்தியக்கூறுகள் இல்லை.
உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவதையே குறிக்கோளாக கொண்டு திமுக செயல்படுகிறது. கடந்த முறை பொங்கல் பரிசுத் தொகை வழங்காத நிலையில் இந்த முறை தோ்தலை மனதில் வைத்து ரூ.3,000 வழங்கியுள்ளது.
இந்த ஆட்சியில் கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. ஜூன் மாதத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக வருவாா் என்றாா்.

