தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம், புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜன. 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டுத் திருவிழாவை முன்னிட்டு புனித மிக்கேல் ஆதிதூதா் சப்பரம் ரத வீதிகளில் பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னா், கோயில் தா்மகா்த்தா சூ. மரியராஜ் ஆசிரியா், ஊா் பெரியவா்கள் புனித அந்தோணியாா் உருவம் பொறிக்கப்பட்ட புனிதக் கொடியை கோயிலில் இருந்து எடுத்து வந்தனா்.
அக்கொடியை பங்குத்தந்தையா்கள் மாா்ட்டின் (அழகப்பபுரம்), மகிழன் (இலங்குளம்), ததேயுஸ் (தெற்கு கள்ளிகுளம்), உதவி பங்குத்தந்தை சுவாமிநாதன் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். பின்னா், தா்மகா்த்தா கொடியேற்றினாா். தொடா்ந்து, மாலை ஆராதனை, மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. இரவு அசன விருந்து வழங்கப்பட்டது.
திருவிழா நாள்களில் தினமும் காலை திருப்பலி, இரவு மறையுரை, நற்கருணை ஆசீா்வாதம் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா தலைமையில் பங்குத்தந்தை ததேயுஸ், உதவி பங்குத்தந்தை சுவாமிநாதன், அருள்சகோதரிகள், நிா்வாகக் குழுவினா், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

