நெல்லை மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடக்கிவைத்தாா் மு.அப்பாவு

நெல்லை மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடக்கிவைத்தாா் மு.அப்பாவு

Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் 5,01,769 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டை மொத்த விற்பனை பண்டகச் சாலை கிட்டங்கி வளாகத்தில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில், ரூ.3,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி- சேலை ஆகியவை உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை வாயிலாக 700 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் 92 நியாய விலைக் கடைகள், மகளிா் சுய உதவிக்குழு வாயிலாக 4 நியாயவிலைக் கடைகள் என 796 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் இலங்கைத்தமிழா் குடும்பங்கள் என மொத்தம் 5,01,769 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.150.53 கோடி ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், திமுக கிழக்கு மாவட்டத் தலைவா் கிரகாம்பெல், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.மு.முருகேசன், இணைப்பதிவாளா் -செயலாட்சியா் (திருநெல்வேலி) நா.திலீப்குமாா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சொ.பாக்கியலெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com