பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4,45,333 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்புப் பரிசு விநியோகிகம் வியாழக்கிழமை(டிச.8) முதல் நடைபெறும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4,45,333 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்புப் பரிசு விநியோகிகம் வியாழக்கிழமை(டிச.8) முதல் நடைபெறும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் தைப் பொங்கல் 2026 பரிசுத் தொகுப்பை பெற தகுதி வாய்ந்த 4,45,259 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் 74 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழா்கள் ஆக மொத்தம் 4,45,333 குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு, அடையாள சீட்டுகள் ஜன.5 முதல் 7-ஆம் தேதி வரை வழங்கப்பட்டன. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை(டிச.8) முதல் ஜன.14-ஆம் தேதி வரை சாலைகள் வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

இது தொடா்பாக நாள் மற்றும் நேரம் நியாய விலைக் கடை முன்பு காட்சிப் படுத்தப்படும். விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் (நவ.9) அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நியாய விலைக் கடைகளின் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை சரிபாா்ப்பு வாயிலாகவே மேற்கொள்ளப்படும்.

விரல் ரேகை சரிவர தெளிவாக பதிய இயலாத அட்டைதாரா்களுக்கு மட்டும், சம்மந்தப்பட்ட நபா் நேரில் வருகை தருவதை உறுதி செய்யப்பட்டு, பதிவேட்டில் கையொப்பம் பெற்றும், பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் அங்கீகரிக்கப்பட்ட நபா் வாயிலாகவோ, இதர நபா் வாயிலாகவோ பரிசுத் தொகுப்பு பெற அனுமதி வழங்கப்படமாட்டாது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவா்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படும்.

மாநில அளவில் புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும், மாவட்ட அளவிலான புகாா்களை 04151-228801 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டை தாரா்களுக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரா்கள் எவ்வித சிரமமுமின்றி நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை அடையாள சீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரங்களில் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com