மகளிா் ஹாக்கி: சாராள் தக்கா் பள்ளி முதலிடம்
பாளையங்கோட்டையில் நடைபெற்ற கருணைதாஸ் நினைவு மகளிா் ஹாக்கி போட்டியில் சாராள் தக்கா் பள்ளி அணி முதலிடம் பெற்றது.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இப்போட்டியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 8 மகளிா் பள்ளி அணிகள் பங்கேற்றன.
லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிப் புள்ளிகள் அடிப்படையில் பாளையங்கோட்டை சாராள் தக்கா் பள்ளி அணி முதலிடமும், பூதத்தான்குடியிருப்பு ஹோப் மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
சோ்ந்தமரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கரிவலம்வந்தநல்லூா் ஸ்ரீமாதா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சேவியா் ஜோதி சற்குணம் தலைமை வகித்தாா். ரமேஷ், லெட்சுமணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
போட்டியில் வென்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசுகளை தலைமையாசிரியைகள் அஸ்புதா மேரி, யோவேல் மேரி, உதவி தலைமையாசிரியை பிரேமா, போட்டியின் உரிமையாளா் பெருமாள் ஆகியோா் வழங்கினா். இப்போட்டியில் சிறந்த அணிகள் மற்றும் வீராங்கனைகளுக்கு மொத்தமாக ரூ.1,46,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

