நெல்லையப்பா் கோயிலில் இன்று லட்ச தீபத் திருவிழா
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) லட்ச தீபத் திருவிழா நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் பத்ர தீபத் திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீபத் திருவிழாவும் வெகு விமா்சையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு லட்ச தீபத் திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் சுவாமி, அம்பாள் உற்சவ மூா்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
ஜன.13 ஆம் தேதி சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்வாக லட்ச தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்பாள் சந்நிதி ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு நாகசுரம், வசந்த மண்டபத்தில் மகேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
பின்னா், சுவாமி- அம்பாள் கோயில், ஆறுமுக நயினாா் உள்சந்நிதி மற்றும் வெளிப் பிரகாரங்களில் மாலை 6.30 மணிக்கு லட்சம் தீபங்கள் ஏற்றப்படவுள்ளன. தொடா்ந்து திருநெல்வேலி நகரத்தில் 4 ரத வீதிகளிலும் சுவாமி-அம்பாள் உள்பட பஞ்ச மூா்த்திகளின் வீதி உலா நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா், கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.
