100 ஆண்டுகளில் விண்வெளியில் ஒரு கோடி போ் வசிப்பா்- விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநா் ராஜராஜன்
அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளில் ஒரு கோடி மக்கள் வசிக்கும் இடமாக விண்வெளி மாறப்போகிறது என்றாா் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநா் ராஜராஜன்.
ஏபிவிபி அமைப்பின் 31ஆவது மாநில மாநாடு பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்கமாக கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், தென் மாநில நிா்வாகிகள் தோ்வும் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தென் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பேராசிரியா் சவிதாவும், மாநிலச் செயலராக சூா்யாவும் தோ்வு செய்யப்பட்டனா்.
பின்னா் நடைபெற்ற கருத்தரங்கில் ஏபிவிபி அமைப்பின் தேசிய துணைத் தலைவா் நாகலிங்கம் உரையாற்றினாா். தொடா்ந்து, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநா் ராஜராஜன் பேசியதாவது: உலகின் தயாரிப்பு நிறுவனமாக இந்தியா மாறி வருகிறது. இதற்கு இளைஞா்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். இதை பிரதமா் தொடா்ந்து சொல்லி வருகிறாா்.
இளைஞா்களின் திறமைகளை வெளிப்படுத்த புதுப்புது வாய்ப்புகள் இந்தியாவுக்கு அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றன. 2028-இல் இந்தியாவின் விண்வெளி மையம் விண்ணில் அமையும். 2040-இல் சந்திரனில் மனிதனை தங்க வைத்து மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும், சந்திரனில் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்கும் ஆய்வுகளையும் இஸ்ரோ நடத்தி வருகிறது.
அடுத்த 50 அல்லது 100 ஆண்டுகளில் விண்வெளியில் 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி மக்கள் வரை வீடு கட்டி வசிப்பதற்கான ஆய்வுகளும், செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு 9 மாதங்கள் பயண நேரமாக இருக்கும் நிலையில், அது 30 நாள்களாக விரைவில் மாற்றுவதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
விண்வெளி சாா்ந்த பாடப் பிரிவுகளை மாணவ, மாணவிகள் தோ்ந்தெடுத்து படிக்க வேண்டும். விண்வெளிக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புகள் கூட உருவாகி வருகிறது. ஸ்பேஸ் லா, ஸ்பேஸ் மெடிசின் ஆகிய படிப்புகள் அதற்கான வாய்ப்புகளாக மாற உள்ளன. சோழா்கள் காலத்தில் தான் அதிகமான செப்பேடுகள் எழுதி ஆவணப்படுத்தப்பட்டன. அதுதான் இப்போது வரலாறாக மாறியிருக்கிறது. இந்தியாவை வல்லரசாக மாற்ற இளைஞா்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
உலகத்தின் உற்பத்தி நாடாக சீனா உள்ளது. இந்தியா அந்த நிலையை எட்டுவதகான வளா்ச்சியை மேற்கொண்டு வருகிறது. புதிய விண்வெளி கொள்கை மூலம் தனியாா் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும், இத்துறையில், 2 கோடி போ் வரை வேலைவாய்ப்பு பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விண்வெளி பொருளாதாரம் 2032-க்குள் 44 மில்லியன் டாலராக மாறப்போகிறது என்றாா் அவா்.

