மானூா் அருகே மனைவி கொலை: கணவா் கைது
மானூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகே உள்ள எம்.குப்பனாபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் அந்தோணி(30). இவருக்கும், மேல இலந்தைகுளத்தை சோ்ந்த மோசே என்பவரது மகள் பாக்கியத்தாய்(23) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பாக்கியத்தாய் சடலமாக மிதப்பதை கண்ட அப்பகுதியினா், இது குறித்து மானூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில் தனது தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பாக்கியத்தாயின் அண்ணன் மானூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் கணவரே கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. அந்தோணியை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

