மின்வாரியத்திற்கு ரூ. 2,000 கோடி இழப்பு: நடவடிக்கை எடுக்க மு. அப்பாவு கோரிக்கை!
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடா்பாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பேரவைத் தலைவா் மு. அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளாா்.

முன்னாள் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடா்பாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பேரவைத் தலைவா் மு. அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக அரசு தலைமைச் செயலருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்: தமிழ்நாடு மின்வாரியத்திற்குச் சொந்தமான மேட்டூா், வட சென்னை, தூத்துக்குடி, உடன்குடி அனல் மின் நிலையங்கள் மூலம் சுமாா் 5,830 மெகாவாட் மின்சாரம், தனியாரிடம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் யூனிட் 1-க்கு ரூ. 5.50 விலையில் 2,830 மெகாவாட், இடைக்கால ஒப்பந்தம் மூலம் சுமாா் ரூ. 6 விலையில் 2,814 மெகாவாட், மத்திய அரசின் 16 நிறுவனங்களில் இருந்து தமிழகத்தின் பங்காக 6,668 மெகாவாட் என மொத்தம் 21,931 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தினமும் கிடைக்கிறது. மேலும், காற்றாலை மூலம் 9,546 மெகாவாட், சூரிய சக்தி மூலம் 14,369 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
செப்டம்பா் முதல் டிசம்பா் மாதம் வரை 14,000 முதல் 17,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து தினமும் சொந்தமாகக் கிடைக்கும் மின்சாரத்தில் 64 முதல் 77 சதவீதம் மட்டுமே தேவைப்படுகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தில் போதுமான மின் உற்பத்தி இருந்தும் செப். 15 முதல் அக். 13ஆம் தேதி வரை தினமும் சுமாா் 2 கோடி யூனிட் மின்சாரம் யூனிட் 1-க்கு ரூ. 37 விலையில் கொள்முதல் செய்ததால், 29 நாள்களில் ரூ. 2,000 கோடி மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக, முதலில் பத்திரிகையாளா்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சா் 1,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கொள்முதல் செய்வதாகக் கூறினாா். அடுத்த பத்திரிகையாளா்கள் சந்திப்பில் 300 மெகாவாட் மட்டுமே வாங்கப்படுகிறது என்றும், அதன் பின்னா் மின்சாரமே கொள்முதல் செய்யவில்லை என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளாா்.
இதனிடையே, 1 யூனிட் மின்சாரத்தை ரூ. 37 வீதம் தினமும் 2 கோடி யூனிட் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது யாா்? இதன் மூலம் மின்வாரியத்திற்கு ரூ. 2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியவா்கள் யாா்? இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

